18 பந்து 20 ரன்.. 18வது ஓவரில் ஆரம்பித்த மேஜிக்.. பைனலுக்கு மும்பை இந்தியன்சை வீழ்த்தி ஆர்சிபி தகுதி

0
681
RCB

இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் பெண்கள் டி20 கிரிக்கெட் லீக் டபிள்யுபிஎல் இரண்டாவது சீசன் தற்பொழுது நடைபெற்று வருகிறது. ஐந்து அணிகள் பங்குபெறும் இந்த தொடரில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாகத் இறுதிப் போட்டிக்கு தகுதி வரும். மற்ற இரண்டு அணிகள் எலிமினேட்டர் சுற்றில் மோதும், எலிமினேட்டர் சுற்றில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் இந்த ஆண்டு டபிள்யுபிஎல் டி 20 லீக்கில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. புள்ளி பட்டியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இன்று எலிமினேட்டர் போட்டியில் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா தைரியமாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். வழக்கம்போல் பெங்களூரு அணிக்கு எல்லா பேட்டிங் வீராங்கனைகளும் சொதப்ப ஆரம்பித்தார்கள்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பேட்டிங்கில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 10, சோபி டிவைன் 10, திஷா கசாத் 0, ரிச்சா கோஸ் 14, மோலிநக்ஸ் 11, வர்ஹாம் 18* ரன்கள் எடுத்தார்கள். பேட்டிங் வரிசையில் மூன்றாவதாக வந்து நிலைத்து நின்று அற்புதமாக விளையாடிய ஆஸ்திரேலியாவின் எல்லீஸ் பெரி 50 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உடன் 66 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. மும்பை பந்துவீச்சு தரப்பில் ஹைலி மேத்யூஸ், நாட் சிவியர் பிரண்ட் மற்றும் சைய்கா ஈசாக் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

எளிய இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணிக்கு துவக்க வீராங்கனைகள் ஹைலி மேத்யூஸ் 15(14), யாசிகா பாட்டியா 19(27) ரன்கள் எடுத்து ஓரளவுக்கு நல்ல துவக்கமே தந்தார்கள். அதிரடியாக விளையாடிய நாட் சிவியர் பிரண்ட் 23(17) ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் நியூசிலாந்தின் அமலியா கெர் இருவரும் பொறுமையாக ஆட்டத்தை நகர்த்தி கடைசி ஐந்து ஓவர்களுக்கு எடுத்துச் சென்றார்கள். 15 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று விக்கெட் மட்டும் இழந்து 93 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஐந்து ஓவர்களில் வெற்றிக்கு 43 ரன்கள் தேவைப்பட்டது.

இந்த நிலையில் 16வது ஓவரில் 11 ரன்கள், 17 வது ஓவரில் 12 ரன்கள் கிடைத்தது. எனவே கடைசி மூன்று ஓவர்களில் வெற்றிக்கு 20 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது கைவசம் ஏழு விக்கெட்டுகள் இருந்தது. இந்த இடத்தில்தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வீராங்கனைகள் மேஜிக் செய்ய ஆரம்பித்தார்கள்.

ஆட்டத்தின் 18 வது ஓவரை வீசிய ஸ்ரேயங்கா படேல் நான்கு ரன்கள் மட்டுமே கொடுத்து கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் விக்கெட்டை கைப்பற்றினார். 19ஆவது ஓவரை வீசிய மொலிநக்ஸ் நான்கு ரன்கள் மட்டுமே விட்டுத் தந்து சஜனா விக்கெட்டை கைப்பற்றினார்.

இதையும் படிங்க : 47 ஓவர்.. நிசாங்கா அசலங்கா நங்கூர ஆட்டம்.. பங்களாதேஷ் அணிக்கு திருப்பிக் கொடுத்த இலங்கை

இதற்கு அடுத்து வெற்றிக்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரை லெக் ஸ்பின்னர் ஆசா ஷோபனா வீசினால். அவர் இந்த ஓவரில் ஆறு ரன்கள் மட்டுமே விட்டுத் தந்து பூஜா வஸ்ட்ரேகர் விக்கெட்டை கைப்பற்றினார். இதற்கு அடுத்து திரில் போட்டியில் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.