இந்த ஆண்டுக்கான சம்பள பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ சில மணி நேரத்திற்கு முன்பு வெளியிட்டது. இதில் சில அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கிறது.
உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொருட்டு, இந்திய அணியில் இடம்பெறாத மற்றும் காயம் அடையாத வீரர்கள் எல்லோரும், தங்கள் மாநில கிரிக்கெட் அணிக்கு விளையாட வேண்டும் என்று பிசிசிஐ கடுமையாக வலியுறுத்தி இருக்கிறது.
கடந்த வருட இறுதியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து மனச்சோர்வு காரணமாக இஷான் கிஷான் விலகிக் கொண்டார். இதற்கு அடுத்து அவர் நேராக ஐபிஎல் தொடருக்கு பயிற்சி பெறுவதற்காக சென்றார். ஆனால் ரஞ்சி கிரிக்கெட்டில் ஜார்க்கண்ட் மாநில அணிக்காக விளையாட செல்லவில்லை.
இதேபோல் ஸ்ரேயாஸ் ஐயர் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து இரண்டாவது பகுதியில் கழட்டி விடப்பட்டார். ஆனால் அவர் உடல் தகுதியோடு இருந்தும், ரஞ்சி கிரிக்கெட்டில் கால் இறுதி சுற்றில் மும்பை மாநில அணிக்காக விளையாடவில்லை.
இதனால் இந்த முறை அறிவிக்கப்பட்ட பிசிசிஐ சம்பள பட்டியலில் இருந்து இவர்கள் இருவரும் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்கள். நான்கு பிரிவுகளில் வீரர்கள் பிரிக்கப்பட்டு, 30 வீரர்கள் ஒட்டுமொத்தமாக சம்பள பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் இங்கிலாந்து தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜுரல் ஆகியோருக்கு சம்பள பட்டியலில் இடம் கொடுக்கப்படவில்லை.
சிறப்பாக விளையாடக்கூடிய இந்த இரண்டு வீரர்களும் சம்பள பட்டியலில் இடம் பெறாதது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் உண்டாக்கி இருக்கிறது. ஆனால் இவர்களும் சம்பள பட்டியலில் இடம் பெறுவார்கள் என்பதுதான் இதில் இருக்கும் நுட்பமான விஷயம்.
பிசிசிஐ இது குறித்து கூறும் பொழுது, இவர்கள் இருவரும் தரம்சாலா மைதானத்தில் நடைபெற இருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பொழுது சி கிரேடு சம்பளப் பிரிவில் இடம் பெறுவார்கள் என கூறியுள்ளது.
இதையும் படிங்க : ஸ்ரேயாஸ் இஷானை சம்பள பட்டியலில் இருந்து நீக்கியது பிசிசிஐ.. 30 வீரர்களுக்கு இடம்.. முழு தகவல்கள்
ஏன் இவ்வாறு கூறப்பட்டுள்ளது என்றால் சி கிரேடு சம்பள பிரிவில் இடம் பெறுவதற்கு ஒரு வீரர் 3 டெஸ்ட் போட்டி அல்லது 10 டி20 போட்டி அல்லது 8 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடு இருக்க வேண்டும். இந்த இளம் வீரர்கள் இருவரும் தற்பொழுது இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார்கள். எனவே மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அடுத்து தரம்சாலா மைதானத்தில் இவர்கள் விளையாடும் பொழுது தாமாகவே சி கிரேடு சம்பளப் பட்டியலில் இடம் பெற்று வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.