257 ரன்.. பூரன் சிக்ஸர் மழை.. டி20 உ.கோ பயிற்சி போட்டியில் ஆஸியை வென்றது வெஸ்ட் இண்டீஸ்

0
13204
WI

தற்போது வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் இரண்டாம் தேதி துவங்க இருக்கும் டி20 உலக கோப்பை தொடர்கான பயிற்சி போட்டிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. நேற்று நடந்த ஒரு பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடியில் மிரட்டி வெற்றி பெற்று இருக்கிறது.

நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவது என அறிவித்தது. மேலும் ஆஸ்திரேலியா அணி கடந்த பயிற்சி போட்டி போலவே முக்கிய வீரர்கள் சிலர் இல்லாமல் விளையாடியது. ஐபிஎல் தொடரில் இருந்து திரும்பிய மூன்று வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு இந்த முறை துவக்க ஆட்டக்காரராக வந்த ஷாய் ஹோப் 8 பந்தில் 14 ரன்கள், ஜான்சன் சார்லஸ் 31 பந்தில் 42 எடுத்து திரும்பினார்கள். இதற்குப் பிறகு அதிரடியில் மிரட்டிய நிக்கோலஸ் பூரன் 25 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் உடன் 75 ரன்கள் குவித்து மிரட்டினார்.

இவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் ரோமன் பவல் 25 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் உடன் 52 ரன்கள் எடுத்தார். கடைசியாக ஆட்டம் இழக்காமல் சிம்ரன் ஹெட்மயர் 13 பந்தில் 18 ரன், ரூதர்போர்ட் அதிரடியாக 18 பந்தில் 47 ரன்கள் எடுக்க, வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஜாம்பா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து பெரிய இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியாவும் சிறப்பாகவே பேட்டிங் செய்தது. துவக்க ஆட்டக்காரராக வந்த ஆஸ்டன் அகர் 13 பந்தில் 28 ரன், டிம் டேவிட் 12 பந்தில் 25 ரன், மேத்யூ வேட் 14 பந்தில் 25 ரன், நாதன் எல்லீஸ் 22 பந்தில் 39 ரன், ஆடம் ஜாம்பா 16 பந்தில் 21 ரன் என எல்லோரும் ரன் எடுத்தார்கள். அதிகபட்சமாக ஜோஸ் இங்லீஸ் 30 பந்தில் 55 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : 98 ரன் 10 விக்கெட்.. பாபர் சாதனை வீண்.. பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து தொடரையும் வென்றது

ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 222ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஜாரி ஜோசப் மற்றும் குடகேஷ் மோட்டி இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணி நடக்க இருக்கும் டி20 தொடரில் மற்ற எல்லா அணிகளுக்கும் பெரிய அச்சுறுத்தலாக இருக்கப் போவது தெளிவாகத் தெரிகிறது!