2024 டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் டேவிட் மில்லர் அடித்த பந்தை சூரியகுமார் யாதவ் பிடித்த கேட்ச் பற்றியான விவாதங்கள் இதுவரையில் ஓயவில்லை. குறிப்பிட்ட அந்த நிகழ்வில் என்ன தவறு நடந்தது என்பது பற்றி வெளிப்படையாக ஏபி டிவில்லியர்ஸ் பேசியிருக்கிறார்.
நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்தை டேவிட் மில்லர் தூக்கி அடிக்க, எல்லைக்கோட்டுக்கு அருகில் இருந்த சூரியகுமார் யாதவ் கேட்ச் பிடித்தார். இதில் அவர் எல்லைக்கோட்டை தொட்டாரா இல்லையா? என்பது பெரிய விவாதமாக மாறியது.
இந்த நிலையில் ஐசிசி நேற்று இது குறித்த துல்லியமான வீடியோவை வெளியிட்டது. அப்போது சூரியகுமார் யாதவ் மிகச் சரியாக அந்த கேட்ச்சை பிடித்திருந்தார். இதன் காரணமாக அதைச் சுற்றி எழுந்த சர்ச்சைகள் முடிவுக்கு வந்தது. அதே சமயத்தில் இதை அப்பொழுதே நடுவர் செய்திருந்தால் இவ்வளவு தூரம் இந்த விஷயம் வளர்ந்து இருக்காது என்பது பலரது கருத்தாக இருக்கிறது.
இதுகுறித்து ஏபி டிவில்லியர்ஸ் கூறும்பொழுது “சூரியகுமார் யாதவ் பௌண்டரி லைனில் கயிற்றை தொட்டாரா அல்லது இல்லையா? என்பது குறித்து எனக்கு எந்த கவலையும் கிடையாது. நான் அந்த ரீ-ப்ளேவை பார்க்கும் பொழுது என்னை சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியதாக இருந்தது. டேவிட் மில்லர் ஆட்டம் இழந்த பொழுதும் வெற்றிக்கு வாய்ப்புகள் இருந்ததால் நான் என்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். அப்பொழுது எங்களுக்கு ஒரு வாய்ப்பு இருந்தது. இதை மீண்டும் அலசுவதை விட, கடந்த காலங்களில் இருந்து நாங்கள் கற்றுக் கொள்வது நல்லது.
இது நடுவரின் முடிவாக இருந்தது. நீங்கள் மிக முக்கிய முடிவை எடுக்கும் பொழுது இன்னும் சில கோணங்களை அதில் ஆராய்ந்து பார்த்திருக்கலாம். நீங்கள் இதற்காக இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்திருக்க வேண்டும்.அந்த நேரத்தில் அவுட்டா இல்லையா? என்பதை முடிவு செய்ய பல கோணங்களை பார்த்து ஒரு பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.
இதையும் படிங்க : கோலி பைனல் விளையாடினதுதான் சரி.. அவரை விமர்சனம் செய்ய முடியாது – மஞ்ச்ரேக்கருக்கு மிஸ்பா உல் ஹக் பதிலடி
இதற்கு அடுத்து ரீ-ப்ளேவை பார்க்கும் பொழுது, இது நடுவரிடம் இருந்து நியாயமான தீர்ப்பாக வந்திருக்கிறது என்று நான் நினைத்தேன். இந்த நிகழ்வை மீண்டும் திரும்பிப் பார்ப்பது கடினமான ஒன்று. அது முடிந்து தூள் தூளாகிவிட்டது. இந்தியா முதலிடம் பிடித்திருக்கிறது அதற்கு என் வாழ்த்துக்கள்” என்று கூறியிருக்கிறார்.