98 ரன் 10 விக்கெட்.. பாபர் சாதனை வீண்.. பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து தொடரையும் வென்றது

0
2842
England

பாகிஸ்தான் அணி தற்பொழுது டி20 உலக கோப்பைக்கு பயிற்சி பெறும் விதமாக நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்தச் சுற்றுப்பயணத்தில் நேற்று நடந்த நான்காவது போட்டியை தோற்று தொடரையும் பாகிஸ்தான் இழந்தது.

இந்தத் தொடரின் இரண்டு போட்டிகள் மழையால் கைவிடப்பட்டு இருக்க ஒரு போட்டியில் இங்கிலாந்து அணி வென்று இருந்தது. இந்த நிலையில் நேற்று நான்காவது போட்டி நடைபெற்றது. போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

- Advertisement -

இந்த முறை துவக்க ஆட்டக்காரர்களாக வந்த பழைய ஜோடி முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 6 ஓவரில் 59 ரன்கள் சேர்த்தார்கள். ஆர்ச்சர் வீசிய பவர் பிளேவின் கடைசி ஓவரின் கடைசிப் பந்தில் பாபர் அசாம் 22 பந்தில் 36 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதற்கு அடுத்து ஆதில் ரசித் பந்துவீச்சில் முகமது ரிஸ்வான் 16 பந்தில் 23 ரன்கள் எடுத்தார்.

பாகிஸ்தான் அணி 5.5 ஓவரில் 59 ரன்களுக்கு விக்கெட் ஏதும் இழக்காமல் இருந்து, மேற்கொண்டு 98 ரன்கள் மட்டுமே சேர்த்து 10 விக்கெட்டுகளையும் கொடுத்து, 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மூன்றாவது இடத்தில் வந்த உஸ்மான் கான் அதிகபட்சமாக 21 பந்தில் 38 ரன்கள் எடுத்தார். ஆதில் ரசீத், லிவிங்ஸ்டன், மார்க் வுட் மூவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு துவக்க ஜோடி கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் பில் சால்ட் இருவரும் அதிரடி ஆன துவக்கத்தை கொடுத்தார்கள். இந்த ஜோடி பவர் பிளேவில் மட்டும் 78 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய பில் சால்ட் 24 பந்தில் 45 ரன், ஜோஸ் பட்லர் 21 பந்தில் 39 ரன், வில் ஜேக்ஸ் 18 பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : ஆஸியில் இருந்து வந்த மண்.. டி20 உ.கோ இந்தியா ஆடும் அமெரிக்க நகரும் ஆடுகளம்.. முழு விபரங்கள்

கடைசி வரை களத்தில் நின்ற ஜானி பேர்ஸ்டோ 16 பந்தில் 28 ரன், ஹாரி புரூக் 14 பந்தில் 17 ரன் எடுத்தார்கள். இங்கிலாந்து அணி 15. 3 ஓவரில் மூன்று விக்கெட்டை மட்டும் இழந்து இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வென்றது. மேலும் 2-0 என தொடரையும் கைப்பற்றியது. இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவராக விராட் கோலி 639 ரன்கள் எடுத்திருந்தார். நேற்றைய போட்டியில் பாபர் அசாம் இந்த சாதனையை முறியடித்து 660 ரன்கள் சேர்த்திருக்கிறார். ஆனால் அணியின் வெற்றிக்கு பயன்படவில்லை!