ஐபிஎல் 2024 புள்ளி பட்டியல்: சிஎஸ்கே ரன் ரேட் உயர்வு.. ஆர்சிபி சோகம்.. பஞ்சாப் சன்ரைசர்ஸ் போட்டியால் நடக்கப் போகும் ட்விஸ்ட்

0
2836

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்து தற்போது ரன் ரேட்டில் நல்ல நிலையில் இருக்கிறது. நாளை நடக்கும் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையிலான போட்டியாலும் புள்ளி பட்டியலில் சிஎஸ்கேவின் இடம் மாற வாய்ப்புள்ளது.

ஆனால் நாளை நடைபெறும் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியின் முடிவை பொறுத்து சிஎஸ்கே அணிக்கு சிக்கலும் இருக்கிறது. சென்னை, கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் குவித்தது. அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக 34 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

சென்னை அணித்தரப்பில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பந்துவீசி வெறும் 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி 17.4 ஓவரில் மூன்று விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் குவித்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சென்னை அணியின் தரவரிசையில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும் நெட் ரன்ரேட்டில் தற்போது +0.666 என்ற நல்ல நிலையில் இருக்கிறது. ஐந்து போட்டியில் விளையாடியுள்ள சென்னை அணி மூன்று போட்டிகளில் வெற்றியும், இரண்டு போட்டிகளில் தோல்வியும் அடைந்திருக்கிறது. முதல் தோல்வி அடைந்துள்ள கொல்கத்தா அணி நான்கு போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றிகளை பதிவு செய்து +1.528 என்ற வலுவான இரண்டாம் நிலையில் இருக்கிறது.

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டி

முதல் இடத்தில் இருக்கிற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி +1.120 என்ற நிலையில் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் முதலிடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது நான்காவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நல்ல நிலையில் வெற்றி பெற்றால் சிஎஸ்கே அணியை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்தில் முன்னேறவும் வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

ஏற்கனவே நான்கு போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றி இரண்டு தோல்வியை சந்தித்துள்ள ஹைதராபாத் அணி நாளை பஞ்சாப் அணியை வலுவான முறையில் வீழ்த்தினால் +0.409 என்ற ரன் ரேட் உயர்ந்து சென்னை அணியை பின்னுக்கு தள்ளும். இதேபோல நான்கு போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளை பதிவு செய்துள்ள பஞ்சாப் அணியும் -0.220 என்ற நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஐபிஎல் 2024: ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்காமல் போக வாய்ப்புள்ள 5 வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள்

இதில் சோகமான விஷயம் என்னவென்றால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐந்து போட்டிகளில் விளையாடி நான்கில் தோல்வியடைந்து ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்று -0.843 என மோசமான நிலையில் இருக்கிறது. இதில் வலுவான லக்னோ அணி நான்கில் மூன்று வெற்றியைப் பெற்று மூன்றாம் இடத்திலும், தற்போது முதல் வெற்றியைப் பெற்றுள்ள மும்பை அணி எட்டாவது இடத்திலும், ஐந்தில் இரண்டு வெற்றி பெற்றுள்ள குஜராத் அணி ஏழாவது இடத்திலும் ஐந்தில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று ரன் ரேட்டில் மிகவும் மோசமாக இருக்கிற டெல்லி அணி 10வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.