இன்று மும்பை அணி தங்களது சொந்த மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மேலும் பிளே ஆப் சுற்று வாய்ப்பையும் இழந்துவிட்டது. தோல்விக்கான காரணங்கள் குறித்து ஹர்திக் பாண்டியா மிகவும் விரக்தியாக பேசியிருக்கிறார்.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். கொல்கத்தா அணி 57 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் சிக்கியது. இந்த நிலையில் புத்திசாலித்தனமாக இம்பேக்ட் பிளேயராக பேட்ஸ்மேன் மனிஷ் பாண்டேவை கொல்கத்தா கொண்டு வந்தது.
வெங்கடேஷ் ஐயர் மற்றும் மணிஷ் பாண்டே இருவரும் சேர்ந்து கொஞ்சம் பொறுமையாகவும் பொறுப்பாகவும் விளையாடி கொல்கத்தா அணியை காப்பாற்றினார்கள். இந்த ஜோடி 62 பந்தில் 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. மணிஷ் பாண்டே 32 பந்தில் 41 ரன்கள், வெங்கடேஷ் ஐயர் 52 பந்தில் 70 ரன்கள் எடுத்தார்கள். கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பும்ரா 18 ரன்னுக்கு மூன்று விக்கெட் கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சூரியகுமார் யாதவ் மட்டுமே போராடி 35 பந்தில் 56 ரன்கள் எடுத்தார். அவரது விக்கெட் விழுந்ததும் மும்பை அணியின் வெற்றிக்கான முடிவுக்கு வந்தது. ஸ்டார்க் மிகச் சிறப்பாக பந்து வீசி நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
போட்டியில் தோல்விக்கு பின் பேசிய மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா “நான் வெளிப்படையாகச் சொல்கிறேன். எங்களால் பேட்டிங்கில் பார்ட்னர்ஷிப்புகளை உருவாக்க முடியவில்லை. தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தோம். நீங்கள் டி20 கிரிக்கெட்டில் குறிப்பிட்ட பார்ட்னர்ஷிப்பை உருவாக்கவில்லை என்றால் பெரிய விலை கொடுக்க வேண்டி வரும். தற்பொழுது நிறைய கேள்விகள் இருக்கிறது. ஆனால் இதற்கு பதில் சொல்ல நேரம் எடுக்கும். இப்போதைக்கு அதிகம் சொல்ல முடியாது.
இதையும் படிங்க : கொல்கத்தா 12 வருட சோகம் முடிந்தது.. மும்பை ப்ளே ஆஃப் விட்டு வெளியேறியது.. கம்பீர் திட்டம் பலித்தது
இந்த போட்டியில் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். முதல் இன்னிங்ஸ் முடிவில் பேட்டிங் செய்வதற்கு விக்கெட் சிறப்பாக மாறியது. நீங்கள் போர்க்களத்தை விட்டு வெளியேறாதீர்கள் தொடர்ந்து போராடுங்கள் என்பதுதான் நான் சொல்வது. இங்கு உங்களுக்கு கடினமான நாட்களும் வரும். அதே போல் சிறந்த நாட்களும் வரும். இங்கு சவால்கள் இருக்கும். ஆனால் சவால்கள்தான் உங்களை சிறந்தவர்கள் ஆக மாற்றும்” என்று கூறியிருக்கிறார்.