ஐபிஎல் விட அதிகம்.. இந்திய டெஸ்ட் வீரர்களுக்கு 3 மடங்கு சம்பளம்.. பிசிசிஐ அறிவிப்பு

0
403
BCCI

ஐபிஎல் தொடருக்கு முக்கியத்துவம் கொடுத்து, உள்நாட்டு தொடர்களை இந்திய வீரர்கள் புறக்கணிப்பது பெரிய அளவில் நடந்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவின் எதிர்கால கிரிக்கெட் பாதிக்கப்படும்.

எனவே பிசிசிஐ இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகாத மற்றும் உடல் தகுதியோடு இருக்கும் அனைத்து வீரர்களும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என கண்டிப்பான உத்தரவை வெளியிட்டு இருக்கிறது.

- Advertisement -

இதை மீறிய இந்திய வீரர்கள் இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை சம்பள பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கி இருக்கிறது. ஹர்திக் பாண்டியாவாக இருந்தாலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடினால் மட்டுமே சம்பள பட்டியலில் இடம் என்று கேட்கப்பட்டு சேர்க்கப்பட்டு இருக்கிறது.

மேலும் சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு இந்தியாவில் இளம் வீரர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், டெஸ்ட் கிரிக்கெட்டை வளர்க்க வேண்டும் என்பதற்காகவும், டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வீரர்களுக்கு ஒரு போட்டியில் கொடுக்கும் சம்பளம் மூன்று மடங்காக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

தற்பொழுது ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடும் வீரர்களுக்கு 15 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டு வந்தது. இது வருடம்தோறும் கொடுக்கப்படும் சம்பளத்தில் சேராது. ஒரு போட்டிக்கு கொடுக்கப்படும் தனிச் சம்பளம் ஆகும்.

- Advertisement -

இந்த நிலையில் ஒரு போட்டிக்கு கொடுக்கப்படும் தனிச் சம்பளத்தில் மூன்று வகையான உயர்வை பிசிசிஐ அறிவித்திருக்கிறது. இந்தியா ஒரு வருடத்தில் விளையாடும் டெஸ்ட் போட்டிகளில் 75% போட்டிகளை விளையாடக்கூடிய வீரர்களுக்கு ஒரு போட்டிக்கான சம்பளம் 15 லட்சத்திலிருந்து 45 லட்சமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

மேலும் 50% டெஸ்ட் போட்டிகளை விளையாடும் வீரர்கள், ஒரு போட்டிக்கு 15 லட்ச ரூபாயிலிருந்து இனி 30 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுவார்கள். இதேபோல் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று, ஒரு போட்டியில் விளையாடாமல் இருக்கும் வீரர்கள் இனி 15லட்ச ரூபாயிலிருந்து, ஒரு போட்டிக்கு 22.5 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுவார்கள்.

புஜாரா போல டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமே விளையாடக்கூடிய வீரர்கள் ஐபிஎல் விளையாடும் வீரர்களை விட மிகக் குறைவாக சம்பாதிக்கிறார்கள். எனவே டெஸ்ட் கிரிக்கெட் விளையாடினாலும் அதிக பணம் சம்பாதிக்க கூடிய வகையில் சம்பளம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க : ஒரிஜினல் பாஸ்பால் இதான்யா.. “முதல் போட்டியில் இருந்து என் திட்டமே இதுதான்” – தொடர் நாயகன் ஜெய்ஸ்வால் பேட்டி

ஒரு வீரர் ஒரு டெஸ்ட் போட்டிக்கு 45 லட்சம் சம்பாதித்தால், அவர் வருடம் பத்து போட்டியில் நாலரை கோடி சம்பாதிக்க முடியும். மேலும் இது இல்லாமல் அவருக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 5 கோடி ரூபாய் சம்பளம் ஆவது கிடைக்கும். எனவே ஐபிஎல் தொடர் அளவுக்கு டெஸ்ட் விளையாடும் வீரரால் சம்பாதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐபிஎல் தொடரில் இந்திய இளம் வீரர்களின் அடிப்படை சம்பளம் 20 லட்சம் ரூபாய். ஆனால் இங்கு ஒரு டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணிக்கு தேர்வாகி விளையாடாமல் இருந்தாலே 22.5 லட்சம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.