இன்று ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஹைதராபாத் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி 78 பந்துகளில் அபார வெற்றி பெற்று இருக்கிறது. இந்த வெற்றிக்கு கேப்டன் ருதுராஜ் 54 பந்துகளின் 98 ரன்கள் எடுத்தது முக்கிய காரணமாக இருக்கிறது. ஆட்டநாயகன் விருது பெற்ற அவர் வெற்றி குறித்து பேசி இருக்கிறார்.
இன்றைய போட்டியில் வழக்கம்போல் ருதுராஜ் டாஸ் தோற்க சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது. சிஎஸ்கே அணிக்கு ருதுராஜ் 54 பந்துகளில் 98 ரன்கள், டேரில் மிட்சல் 32 பந்துகளில் 52 ரன்கள், சிவம் துபே 20 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்கள். சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது.
இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணி 18.5 ஓவர்களில் 134 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணிக்கு மார்க்ரம் மட்டும் 26 பந்தில் 32 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே அணியின் தரப்பில் துஷார் தேஷ்பாண்டே மூன்று ஓவர் வீசி நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
வெற்றிக்குப் பின் பேசிய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் “இந்த மாதிரி ஈரமான சூழ்நிலையில் விளையாடுவது மிகவும் கடினமானது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. டாஸ் எங்களுக்கு தவறாக போனாலும் மாறுவேடத்தில் வந்து ஆசீர்வாதம் செய்திருக்கிறது. எனக்கு காயம் எதுவும் இல்லை நன்றாக இருக்கிறது.
நான் சதம் அடிப்பது குறித்து யோசிக்கவில்லை. எங்கள் அணி 220 ரன்கள் எடுப்பது குறித்து தான் யோசித்தேன். மேலும் வெல்ல வேண்டிய நான்கு ஐந்து போட்டிகளில் தோல்வி அடைந்ததால் ஏமாற்றத்தில் இருந்தேன். நினைத்த ரன்களை எடுக்க முடியாததால், பேட்டிங் செய்து முடித்த போது வருத்தத்தில் இருந்தேன். ஆனால் இன்று அதுவே போதுமான ரன்களாக இருக்கிறது.
இதையும் படிங்க : இதெல்லாம் தோல்வியே இல்ல.. மீண்டு வருவோம்.. என் முடிவு ரொம்ப சரியானது – பாட் கம்மின்ஸ் பேட்டி
இம்பேக்ட் பிளேயர் விதி இருப்பதால் எப்போதும் நீங்கள் 20 ரன்கள் அதிகம் எடுக்க வேண்டும். இங்கு சரியான ஸ்கோர் எதுவென்பது கடினமானது. பவர் பிளேவில் தற்போது எல்லோரும் சிறப்பாக பந்து வீசுகிறார்கள். கடந்த போட்டியில் நாங்கள் செய்த தவறுகளை சரி செய்து இருக்கிறோம். ஜடேஜா இப்படிப்பட்ட ஈரமான சூழ்நிலையில் 22 ரன் மட்டும் தருவது சாதாரண விஷயம் இல்லை. மேலும் டிரெஸ்ஸிங் ரூமில் சீனியர்களிடம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல முடியாது. பின் இருக்கையில் இருந்து கொண்டு அவர்கள் செய்ய வேண்டியதை செய்ய அனுமதிக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.