கேப்டன்சியில அடுத்த தோனி கம்மின்ஸ்தான்.. நாம் யோசிக்காத இந்த முடிவுகளை நேற்று எடுத்தார் – டாம் மூடி பேச்சு

0
152
Cummins

நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே ஐபிஎல் தொடரில் நடைபெற்ற போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் எளிமையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் கேப்டன்சி தோனியை போல இருந்தது என ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் டாம் மூடி கூறியிருக்கிறார்.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவர் பிளே மற்றும் மிடில் ஓவர்களில் ஓரளவுக்கு தாக்குப் பிடித்து விளையாடியது. ஆனால் இறுதிக்கட்ட ஓவர்களில் ஆடுகளம் மெதுவாக இருந்ததை பயன்படுத்தி, கம்மின்ஸ் வேகப்பந்துவீச்சாளர்களை மிக மெதுவாக பந்து வீச வைத்து வெற்றி பெற்றார்.

- Advertisement -

அதே சமயத்தில் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடதுகை பேட்ஸ்மேன்கள் சிவம் துபே மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் குறிப்பிடும்படி நன்றாகவே விளையாடியிருந்தார்கள். ஆடுகளம் மெதுவாக இருந்த போதிலும் கூட இவர்களுக்கு எதிராக ஆப் ஸ்பின்னர் எய்டன் மார்க்ரம்மை கம்மின்ஸ் கொண்டு வரவில்லை.

இவர் தொடர்ச்சியாக வேகப்பந்துவீச்சாளர்களையே மெதுவாக வீசவைத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய நெருக்கடியை உருவாக்கினார். இதற்கு அடுத்து நேற்றைய போட்டியில் மயங்க் அகர்வால் மற்றும் ராகுல் திரிபாதி இருவரையும் அணியில் தேர்வு செய்யவில்லை. இவர்களுக்கு பதிலாக ஃபினிஷர் நிதிஷ் ரெட்டியை கொண்டு வந்தார். அதே சமயத்தில் மூன்றாவது இடத்தில் விளையாடிய அபிஷேக் சர்மாவை மீண்டும் துவக்க வீரராக மாற்றினார். இதெல்லாம் அந்த அணிக்கு பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி கூறும் பொழுது “கம்மின்ஸிடம் எனக்கு பிடித்த விஷயம் அவர் தோனி போலவே செயல்படுகிறார். நாம் ஏன் இப்படி யோசிக்கவில்லை என்பது போல நாம் நினைக்கும் அளவுக்கு அவர் முடிவுகளை எடுக்கிறார். நேற்று அவர்கள் முடிவெடுப்பதற்கு வேறு வழிகள் இருந்த போதிலும், இவர் முடிவு செய்தது வித்தியாசமாக இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : இன்னைக்கு கோலியின் விக்கெட்டை தூக்கனும் அதான் பிளானே.. அதுக்கப்புறம் ஆர்சிபி அவ்வளவுதான் – யுஸ்வேந்திர சாகல் பேட்டி

நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணியின் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஆப் ஸ்பின்னர் எய்டன் மார்க்ரம்மைக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் புதிய பந்தில் மிகச்சிறந்த பந்துவீச்சாளரான புவனேஸ்வர் குமாரையே அவர் தொடர்ந்து பயன்படுத்தினார். அவர் தான் எடுக்கும் முடிவுகள் மிகச் சரியானவை என்று அவரையே அவர் நம்ப வைக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.