ஆர்சிபி போட்டிகள் பெங்களூரில் நடக்குமா?.. சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த கர்நாடக கிரிக்கெட் சங்கம்

0
105
RCB

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் வருகின்ற மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே துவங்க இருப்பது நாம் அறிந்த செய்தியே.

இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கிரிக்கெட் ரசிகர்களை பெரிய அதிர்ச்சியடைய வைக்கும் செய்தியாக சமீப சில நாட்களில் பெங்களூரில் நிலவிவரும் தண்ணீர் பஞ்சம் அமைந்திருக்கிறது. அங்கு கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகின்ற காரணத்தினால், கர்நாடக அரசு தண்ணீரை பயன்படுத்துவது தொடர்பாக புதிய கொள்கைகளை அறிவித்திருக்கிறது.

- Advertisement -

இதன் அடிப்படையில் எடுத்துக் கொள்ளும் பொழுது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் போட்டிகள் அதன் சொந்த மைதானமான பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறுமா? என்கின்ற பெரிய சந்தேகம் நிலவி வந்தது. தண்ணீர் பஞ்சம் நிலவுகின்ற சூழ்நிலையில், மைதானம் மற்றும் ஆடுகளத்தை பராமரிப்பது, மேலும் போட்டியை பார்க்க வருகின்ற ரசிகர்களுக்கான குடிநீர் தேவையை நிறைவேற்றுவது என கர்நாடக கிரிக்கெட் சங்கத்திற்கு பெரிய அளவில் சிக்கல்கள் இருந்தது.

இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் போட்டிகளை வெளிமாநிலத்தில் எங்காவது நடத்தலாமா? என்பது குறித்தான பேச்சுவார்த்தைகள் சென்று கொண்டிருப்பதாக கூறப்பட்டது. இப்படி மாற்றப்படும் பொழுது பெரும்பான்மை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரசிகர்கள் கர்நாடகாவில் இருக்கின்ற காரணத்தினால், அவர்கள் நிச்சயம் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மேலும் அந்த மைதானத்தின் ஆடுகளத்திற்கு ஏற்ற அணியை உருவாக்கியதிலும் பின்னடைவு ஏற்படும்.

- Advertisement -

இந்த நிலையில் இந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கர்நாடக கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தற்போதைக்கு நாங்கள் எந்த ஒரு நெருக்கடியையும் தண்ணீர் விஷயத்தில் சந்திக்கவில்லை. நீர் பயன்பாடு தொடர்பான அறிவுரைகளை நாங்கள் அரசாங்கத்திடமிருந்து பெற்று இருக்கிறோம். மேலும் அரசின் நீர் பயன்பாடு தொடர்பான வழிமுறைகளை பின்பற்றுவது குறித்து நாங்கள் தொடர்ச்சியான கூட்டங்களை நடத்தி வருகிறோம்” என்று கூறப்பட்டிருக்கிறது.

கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் பொறுப்பாளர் சுபேந்து கோஷ் பேசும்பொழுது ” நாங்கள் ஏற்கனவே ஆடுகளம் மற்றும் மைதானத்தின் பிற தேவைகளுக்கான தண்ணீர் பயன்பாட்டை, எஸ்டிபி ஆலையிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரை சுத்திகரித்து பயன்படுத்தி வருகிறோம். போட்டியின் போது எங்களுக்கு பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். நாங்கள் இதை எஸ்டிபி ஆலையில் இருந்து உருவாக்க முடியும் என்று நம்புகிறோம்.

இதையும் படிங்க : ஐசிசி டெஸ்ட் ரேங்கில் கோலியை தாண்டிய ரோகித்.. ஜெய்ஸ்வால் அஸ்வின் வேற லெவல் மாஸ்

நாங்கள் நிலத்தடி நீரை எந்த காரணத்திற்காகவும் மைதானத்தில் பயன்படுத்த மாட்டோம். நீர் பயன்பாடு தொடர்பாக அரசு கூறியுள்ள விஷயங்களில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். மேலும் அரசு அறிவித்துள்ள எல்லா கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு, போட்டியையும் நடத்த முடியும் என்று உறுதியாக நம்புகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -