9.4 ஓவர்.. 62 பந்துகள் மீதம்.. லக்னோ அணியை பந்தாடிய ஹைதராபாத் சாதனை.. அபிஷேக் ஹெட் ருத்ர தாண்டவம்

0
1261
SRH

இன்று ஐபிஎல் தொடரின் 57வது போட்டியில் ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் ஹைதராபாத் அணியும் லக்னோ அணியும் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் லக்னோ அணி நிர்ணயித்த இலக்கை 10 ஓவர்களுக்குள் எடுத்து ஹைதராபாத் துவக்க ஜோடி அசத்தல் சாதனை படைத்திருக்கிறது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஹைதராபாத் அணி பவர் பிளேவில் அட்டகாசமான பவுலிங் செய்தது. லக்னோ அணியின் குயிண்டன் டி காக் ஐந்து பந்துகளில் இரண்டு ரன்கள், ஸ்டோய்னிஸ் மூன்று பந்தில் ஐந்து ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். இதற்கு அடுத்து நீண்ட நேரம் பொறுமையாக விளையாடிய கேப்டன் கேஎல் ராகுல் 33 பந்தில் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார். கொஞ்சம் அதிரடி காட்டிய குருனால் பாண்டியா சமாளிக்க முடியாமல் 21 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். லக்னோ அணி மிகப்பெரிய சிரமத்தில் சிக்கியது.

- Advertisement -

இதற்கு அடுத்து நிக்கோலஸ் பூரன் மற்றும் ஆயுஸ் பதோனி இருவரும் ஜோடி சேர்ந்து மிகச் சிறப்பாக விளையாடிய லக்னோ அணியை மீட்டார்கள். பூரன் 26 பந்தில் 48 ரன்கள் எடுக்க, ஆயுஸ் பதோனி 35 பந்தில் 55 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. புவனேஸ்வர் குமார் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணியின் துவக்க ஜோடி டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் ருத்ர தாண்டவம் ஆடினார்கள். ஹெட் 14 பந்தில் அரைசதம் அடிக்க, அவரைத் தொடர்ந்து பவர் பிளேவில் அபிஷேக் ஷர்மாவும் அரை சதம் அடித்தார். இந்த ஜோடி பவர் பிளேவில் 107 ரன்கள் குவித்தது.

மேலும் தொடர்ந்து விளையாடிய இந்த ஜோடியின் அதிரடியை லக்னோ அணியால் நிறுத்தவே முடியவில்லை. இறுதியில் 9.4 ஓவரில் அனாயசமாக 167 ரன்கள் எடுத்து இலக்கை எட்டி பத்து விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அபார வெற்றி பெற்றது. டிராவிஸ் ஹெட் 30 பந்தில் எட்டு பவுண்டரிகள், எட்டு சிக்ஸர்களுடன் 89 ரன்கள், அபிஷேக் சர்மா 28 பந்துகளில் எட்டு பவுண்டரி மற்றும் ஆறு சிக்ஸர்கள் உடன் 75 ரன்கள் குவித்தார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : என் சாதனைகளை உடைக்க.. விடியற்காலை 4 மணி வரை ஐடியா கேட்ட இந்திய வீரர் – லாரா வெளியிட்ட சுவாரசிய தகவல்

மேலும் 150 க்கு மேலான இலக்கை 10 ஓவர்களுக்குள் துரத்திய முதல் அணி என்கின்ற சாதனையை ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் படைத்திருக்கிறது. மேலும் பவர் பிளேவில் அதிக சிக்சர் அடித்தவர் என்கின்ற சாதனையை அபிஷேக் சர்மாவும், பவர் பிளேவில் அதிக சிக்ஸர்களை ஒரு ஐபிஎல் தொடரில் அடித்த ஜோடியாக அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஜோடி சாதனை படைத்திருக்கிறது. ஹைதராபாத் மூன்றாவது இடத்திற்கும், சிஎஸ்கே நான்காவது இடத்துக்கும், டெல்லி ஐந்தாவது இடத்துக்கும் புள்ளி பட்டியலில் முன்னேறி இருக்கின்றன. அதே சமயத்தில் லக்னோ ஆறாவது இடத்திற்கு சரிந்திருக்கிறது.