இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்தாவது டெஸ்ட் போட்டி வருகின்ற மார்ச் மாதம் ஏழாம் தேதி துவங்க இருக்கிறது. இந்திய அணி முதல் நான்கு போட்டியில் ஒன்றை இழந்து மூன்றரை வென்று தொடரைக் கைப்பற்றி இருக்கிறது.
இந்திய அணி நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதற்கு முன்பாக, ஒன்றுக்கு இரண்டு என தொடரில் முன்னிலை வகித்தது. நான்காவது போட்டியை இங்கிலாந்து அணி வென்று இருந்தால், தொடரை இங்கிலாந்து அணி சமன் செய்து ஐந்தாவது போட்டியை இறுதிப்போட்டியாக மாற்றி இருக்கும்.
மேலும் நான்காவது போட்டி முதல் இரண்டு இன்னிங்ஸ் முடிவில் இங்கிலாந்து அணியின் கைகளே ஓங்கி இருந்தது. மேலும் இந்திய அணி தான் நான்காவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. ஆனால் இங்கிலாந்து அணி மூன்றாவது இன்னிங்ஸில் மோசமாக விளையாடி 145 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டதால் இந்திய அணி வெற்றி பெற்று தப்பித்தது.
இப்படி முக்கியத்துவம் வாய்ந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு கொடுத்தது அப்பொழுதே முணுமுணுப்புகளை உருவாக்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடி மொத்தமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு ஓய்வு கொடுத்திருக்கலாம் என்கின்ற கருத்து பலருக்கும் இருந்தது.
இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது ” ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெறும் 15 ஓவர்களும், இரண்டாவது இன்னிங்ஸில் எட்டு ஓவர்கள் மட்டுமே அவர் வீசி இருந்தார். மொத்தமாக சேர்த்து அவர் வீசியது 23ஓவர்கள்தான். ஆனாலும் பயிற்சியாளர்கள் பரிந்துரைப்படி அவர் ஓய்வுக்கு சென்றார்.
இரண்டாவது டெஸ்ட் மற்றும் மூன்றாவது டெஸ்ட்க்கு இடையே மொத்தமாக ஒன்பதுநாட்கள் இடைவெளி இருந்தது. இந்த ஓய்வில் திரும்பி வந்த அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 23 ஓவர்கள் மட்டுமே பந்து வீசினார். இது ஒரு வீரரை சோர்வடைய வைக்க போவது கிடையாது. இப்படி இருக்கும் பொழுது பும்ராவுக்கு எதுக்கு ஓய்வு
மேலும் நான்காவது டெஸ்ட் போட்டி முடிந்து ஐந்தாவது டெஸ்ட் போட்டி துவங்குவதற்கு நடுவில் 8 நாட்கள் ஓய்வு இருக்கிறது. இது ஒரு சிறந்த தடகள வீரர் முழுமையாக திரும்பி வருவதற்கு போதுமான அவகாசமாகும்.
நான்காவது டெஸ்ட் இந்திய அணிக்கு முக்கியமான ஒரு ஆட்டமாக இருந்தது. அந்தப் போட்டியில் இங்கிலாந்து வென்று இருந்தால் தொடர் சமநிலைக்கு வந்திருக்கும். பும்ரா விஷயத்தில் என்சிஏ இல்லை பயிற்சியாளர்கள் முடிவு எடுத்திருந்தாலும் கூட இந்திய அணி பெரிய ஆர்வம் காட்டாமல் விட்டுவிட்டது.
இதையும் படிங்க : கான்வே காயம்.. சிஎஸ்கே-வில் ரச்சின் ரவீந்திரா ஓபன் செய்ய 3 முக்கியமான காரணங்கள்
ரோகித் சர்மா கூறியது போல நாட்டிற்காக விளையாடுவது பெரிய கவுரவம் அங்கு எந்த சலுகையும் கிடையாது. விளையாட வேண்டும் என்கின்ற பசி இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.