தற்போது சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணி உலக லெவன் அணியையும் துபாயில் வைத்து வீழ்த்தக்கூடிய அளவுக்கு திறமை வாய்ந்தது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி பாராட்டி இருக்கிறார்.
நடந்து முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கைப்பற்றியது. இந்த நிலையில் இந்திய அணிக்கு வெளியில் இருந்து நிறைய பாராட்டுகள் வந்து கொண்டிருக்கிறது.
உலக லெவனை இந்திய அணி தோற்கடிக்கும்
இந்திய அணி கடந்த மூன்று ஐசிசி தொடர்களாக ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்திருக்கிறது. டி20 உலகக் கோப்பையில் ஒரு போட்டி கூட தோல்வியடையாமல் கோப்பையை வென்றது. தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் தொடரை வென்று இருக்கிறது. இந்திய அணி தற்பொழுது வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மிகவும் திறமை வாய்ந்த அணியாக தெரிகிறது.
இதுகுறித்து ஷாகித் அப்ரிடி பேசும் பொழுது ” ஓபனர்கள், மிடில் ஆர்டர்கள், உண்மையான ஆல் ரவுண்டர்கள், சுழல் பந்துவீச்சாளர்கள் மற்றும் வேகப் பந்துவீச்சாளர்கள் என இந்திய அணியை பார்த்தால், நீங்கள் துபாய்க்கு உலக லெவனை கூட்டி வந்து விளையாட வைத்தாலும் அவர்களை இந்திய அணி வெல்லக்கூடிய அளவுக்கு திறமையாக இருக்கிறது”
இந்திய அணி தகுதியானது
இந்திய அணி இந்த கோப்பையை வெல்வதற்கு முற்றிலும் தகுதியானது. நீங்கள் உள்நாட்டில் கல்விக்கூடங்கள் முதல் கிரிக்கெட்டுக்கு முதலீடு செய்து வந்தால் அதற்கான பலன்கள் நிச்சயம் கிடைக்கும். இந்திய அணி ஒரே இடத்தில் விளையாடியதால் அவர்களுக்கு கண்டிஷன் பழகும் என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் இதை வைத்து அணியை தேர்வு செய்த விதம் மிகவும் சிறப்பாக இருந்தது”
இதையும் படிங்க : 78 வருஷமா பாகிஸ்தான் கிரிக்கெட் திருந்தல.. சக்லைன் பேசினது ரொம்ப தப்பு – யுவராஜ் அப்பா விமர்சனம்
“இந்திய அணியின் தற்போதைய வெற்றிக்கு அவர்களுடைய தேர்வு மிக முக்கிய காரணம் ஆகும். துபாய் கண்டிஷன் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சரியானது. நாம் அங்கு சுழல் பந்துவீச்சாளர்களை வைத்து தாக்குவோம். இதை உணர்ந்து மிகச் சரியான ஒரு அணியை கோப்பையை வென்று அசத்தி இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.






