பாகிஸ்தான் முன்னாள் வீரர் சக்லைன் முஸ்தாக் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்வது குறித்து தெரிவித்த கருத்துக்கு யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் கடுமையான முறையில் எதிர்வினை செய்திருக்கிறார்.
பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் தற்போது மிகவும் சரிந்திருக்கிறது. அந்த அணி உள்நாட்டில் பங்களாதேஷ் வரை தோல்வியடைந்து வருகிறது. மேலும் தற்போது பாகிஸ்தான் நடத்திய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் அணியாக ஆறே நாட்களில் வெளியேறியது. மேலும் இந்த தொடரில் இந்திய அணிக்கு எதிராக துபாய் மைதானத்தில் படுதோல்வி அடைந்தது.
சக்லைன் முஸ்டாக் தெரிவித்த கருத்து
“அரசியல் விவகாரங்களை ஒதுக்கி வைத்து விட்டு பார்க்கும் பொழுது, இந்திய அணியின் வீரர்கள் மிகவும் நல்லவர்கள், அவர்கள் நன்றாக கிரிக்கெட் விளையாடுகிறார்கள். ஆனால் அவர்கள் நல்ல அணியாக இருக்கிறார்கள் என்றால் எங்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று வடிவத்திலும் தலா 10 போட்டிகள் விளையாட வேண்டும். பின்னர் யார் சிறந்த அணி என்பது தெளிவாகி விடும்”
“நாங்கள் எங்கள் விஷயங்களை சரியாக செய்து, அவற்றை மிகச் சரியாக வரிசைப்படுத்தினால், உலகிற்கும் இந்தியாவிற்கும் சரியான பதிலை கொடுக்க கூடிய இடத்தில் நாங்கள் இருப்போம். இதில் எனக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது” என்று கூறியிருந்தார்.
யோக்ராஜ் சிங் தந்த பதிலடி
இது குறித்து யோக்ராஜ் சிங் பேசிய பொழுது “நான் சக்லைன் முஸ்டாக் கருத்தை படித்தேன். அவர்களுக்கு ஒரு விஷயத்தை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. அவர்கள் பேச வேண்டும் என்று பேசுகிறார்கள். அவர்கள் 78 வருடங்களாக எதையும் கற்றுக் கொள்ளவில்லை. அவர்களுக்கு நாம் என்ன கற்பித்து விட முடியும்? அவர்கள் வீரர்களை தொடர்ந்து திட்டக்கூடிய அவர்களே என்ன கற்பித்து விட முடியும்?”
இதையும் படிங்க : கேப்டன் ஆனதும் முதல் பிரச்சனை.. லக்னோ அணியின் ஸ்டார் பவுலர் காயம்.. சிக்கலை சமாளிப்பாரா ரிஷப் பண்ட்.?
“ஒரு நாட்டை எப்படி நடத்த வேண்டும் என்பதை அவர்கள் இந்தியாவிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுவது உள்ளூர் அணிக்கு எதிராக விளையாடுவது போல உணர்கிறேன். பாகிஸ்தான் அணி வேண்டுமானால் இந்திய பி அணியுடன் விளையாடலாம்” என்று கூறியிருக்கிறார்.






