2027 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இடம் பெறுவார்களா என்பது குறித்து இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி விளையாடி வருகிறார்கள்.
அடுத்து வரும் உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் 13 மாதங்கள் உள்ள நிலையில், இப்போதே அவர்களின் தேர்வை பற்றி கணிப்பது கடினம் என்று ஆஷிஷ் நெஹ்ரா கூறியுள்ளார்.
இதுகுறித்து ஆஷிஷ் நெஹ்ரா பேசும்போது “இந்திய கிரிக்கெட்டில் மட்டுமின்றி எந்தவொரு விளையாட்டிலும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்பாக கூட நிலைமைகள் மாறக்கூடும். அவர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவிக்கும் பட்சத்தில் ஏன் விளையாடக் கூடாது?” என்று ஆரம்பித்து “இவ்வளவு அனுபவம் வாய்ந்த வீரர்களை கையாளும் போது எந்தவொரு கேப்டனுக்கும் அல்லது கோச்சிற்கும் முடிவு எடுப்பது எளிதான காரியம் அல்ல” என்று கூறி இருக்கிறார்.
மேலும் இந்த விவகாரம் குறித்து பேசிய அவர் “ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி கடந்த காலத்தில் என்ன செய்திருக்கிறார்கள் என்பதை பற்றி நாம் பேசி விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் உலகக்கோப்பைக்கு இன்னும் 13 மாதங்கள் இருப்பதால் இப்போதே அவர்கள் விளையாடுவார்கள் என்று உறுதியாக சொல்ல முடியாது. இளம் வீரர்கள் உருவாகி வரும் இந்த காலத்தில், தொடர்ந்து சிறப்பான பார்மை வெளிப்படுத்தினால் மட்டுமே அணியில் தொடர முடியும்” என்று கூறி இருக்கிறார்.






