இன்று இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு முதலில் அதிர்ச்சியாக துவங்கினாலும், முதல் நாள் முடியும் போது சில முக்கியமான நம்பிக்கைகளை கொடுத்து முடிந்திருக்கிறது.
இந்திய அணி இன்று மூன்று விக்கெட்டுகளை 33 ரன்களுக்கு இழந்த பிறகு, அனுபவ வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் சேர்ந்து சதம் அடித்து, 204 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, இந்திய அணி முதல் நாள் முடிவில் 326 ரன்கள் எடுக்க முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்கள்.
இந்த போட்டியில் நான்காவது விக்கெட்டாக 131 ரன்கள் எடுத்து இந்திய அணி 237 ரன்கள் எடுத்திருந்த பொழுது கேப்டன் ரோஹித் சர்மா மார்க் வுட் பந்து வீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
இதற்கு அடுத்து அறிமுக வீரராக களம் இறங்கிய சர்ப்ராஸ் கான், முதல் போட்டியின் எந்தவித நெருக்கடியும் இல்லாமல், மேலும் தனது குடும்பத்தார் முன்னிலையில் அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
திடீரென ரவீந்திர ஜடேஜா மிக மெதுவாக விளையாடி சர்ப்ராஸ் கானுக்கு ஒத்துழைப்பு கொடுக்க, சர்பராஸ் கான் மறுமுனையில் பின்னி எடுக்க ஆரம்பித்து விட்டார். மிகச் சிறப்பாக விளையாடிய அவர் 48 பந்தில் தனது அறிமுக சர்வதேச டெஸ்ட் போட்டியில் அரை சதம் அடித்தார்.
அவர் சுழற் பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடிய விதத்தை பார்க்கும் பொழுது, சிறுவர்களின் பந்தை பெரிய பேட்ஸ்மேன் அடிப்பது போல் இருந்தது. எனவே முதல் நாள் ஆட்டம் முடிய சில ஓவர்கள் மட்டுமே இருக்கும் நிலையில், நாளை சர்பராஸ் கான் பெரிய அளவில் ரன்கள் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இப்படியான நிலையில் ரவீந்திர ஜடேஜா தனது சதத்திற்காக பந்தை தட்டி ஓடி வர முயல, சர்பராஸ் கான் வேகமாக ஓட, ஜடேஜா நின்றுவிட்டார். இந்த நேரத்தில் பந்தை பிடித்த மார்க் வுட் சர்பராஸ் கானை ரன் அவுட் செய்துவிட்டார். பரிதாபமாக இளம் வீரர் 62 ரன்களில் வெளியேறினார்.
இதையும் படிங்க : ரோகித் ஜடேஜா அபார சதம்.. சர்பராஸ் கான் அதிரடி அரைசதம்.. வலிமையான நிலையில் இந்தியா.. போராடும் இங்கிலாந்து
மைதானத்தில் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து இருக்க, பெவிலியனில் இருந்த கேப்டன் ரோஹித் சர்மா கடுமையான கோபத்தில் தன்னுடைய தொப்பியை கழட்டி வீசி எறிந்தார். முதல் டெஸ்ட் போட்டியிலும் இப்படியான ரன் அவுட் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மிகச் சிறப்பாக ஓடக்கூடிய ரவீந்திர ஜடேஜா ரன் அவுட்டுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்!