“மும்பை போகட்டும்.. ரோகித் அடுத்த வருஷம் சிஎஸ்கேவுக்கு கேப்டனா வாங்க” – அம்பதி ராயுடு நேரடி அழைப்பு

0
150
Rohit

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தாண்டி உலகில் பல கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் 17வது ஐபிஎல் சீசன் வருகின்ற மார்ச் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியின் மூலம் துவங்குகிறது.

இதுவரை நடைபெற்ற 16 ஐபிஎல் சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து முறையும் ஐபிஎல் கோப்பைகளை வென்று இருக்கின்றன. இதில் இரண்டு அணிகளுக்கும் கோப்பையை வென்ற கேப்டன்களாக ரோகித் சர்மா மற்றும் மகேந்திர சிங் தோனி இருவர் மட்டுமே இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் தனது கடைசிக் கட்டத்தில் இருக்கும் மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டனாக இருந்ததோடு, தற்பொழுதும் கேப்டனாக இருந்து வருகிறார். கேப்டனாக ஐபிஎல் தொடருக்குள் வந்த அவர் கேப்டனாகவே ஓய்வு பெறவும் இருக்கிறார்.

ஆனால் குறைந்தது இன்னும் மூன்று ஆண்டுகள் ஆவது ஐபிஎல் தொடரில் விளையாட முடிந்த ரோகித் சர்மா, ஐபிஎல் வரலாற்றில் சிறந்த கேப்டனாகவும், வெற்றிகரமான கேப்டனாகவும் இருந்தும் கூட மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தால் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இது மும்பை இந்தியன்ஸ் அணி வட்டாரத்தில் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்திய விஷயமாக மாறி இருக்கிறது.

இந்த நிலையில் அவருடைய இடத்திற்கு, மும்பை அணியில் இருந்து குஜராத் அணிக்கு சென்று தற்பொழுது மீண்டும் மும்பை அணிக்கு திரும்பியிருக்கும் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கொண்டு வந்திருக்கிறது. இந்த முடிவை மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் யாருமே ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

- Advertisement -

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்தும் ரோஹித் சர்மா குறித்தும் பேசி உள்ள மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டு அணிகளுக்கும் விளையாடியிருக்கும் அம்பதி ராயுடு கூறும்பொழுது ” ரோகித் சர்மா அடுத்த ஐந்து ஆறு ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரில் விளையாட முடியும். அவர் கேப்டனாக நினைத்தால் அவருக்கு உலகம் முழுவதும் கதவுகள் திறந்திருக்கும். அவரால் எங்கும் கேப்டன் ஆக முடியும்.

ரோகித் சர்மா 2025 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்காக விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மேலும் தோனி ஓய்வு பெறும் பொழுது ரோகித் சர்மா சிஎஸ்கே அணிக்கு தலைமை தாங்க முடியும்” என கூறியிருக்கிறார்.