இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி அந்தத் தொடரை சமன் செய்து வந்தது.
அந்தத் தொடரில் முதல் போட்டியை தோற்ற இந்தியா, பேட்டிங் செய்வதற்கு மிகவும் மோசமான ஆடுகளத்தில் இரண்டாவது போட்டியை வென்று தொடரை சமன் செய்தது.
அந்த போட்டிக்கு பிறகு பேசி இருந்த இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, நாங்கள் எந்த நாட்டின் ஆடுகளத்தையும் குறை கூறுவது கிடையாது, ஆனால் எங்கள் நாட்டிற்கு வரக்கூடியவர்களும் அதே போல் இருந்தால் நல்லது எனக் கூறியிருந்தார்.
மேலும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக, இந்தியாவில் எப்படிப்பட்ட ஆடுகளம் கிடைத்தாலும் அது குறித்து தாங்கள் எதுவும் சொல்லப் போவது கிடையாது என இங்கிலாந்து தரப்பில் சொல்லப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சில காலமாக இந்தியாவில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளங்கள் அமைக்கப்படுவதைப் போல இந்த தொடருக்கு அமைக்கப்படவில்லை. பேட்டிங் செய்வதற்கு ஓரளவுக்கு சாதகம் இருக்கக்கூடிய ஆடுகளங்கள் அமைக்கப்பட்டன.
அதே சமயத்தில் நான்காவது டெஸ்ட் போட்டிக்கு ராஞ்சி மைதானத்தில் அமைக்கப்பட்ட ஆடுகளத்தில் முதல் நாளிலேயே விரிசல்கள் இருந்தன. சில பந்துகள் அந்த விரிசலில் படும்பொழுது உருள செய்தன. இதுகுறித்து சில இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பிய பொழுது “ஆடுகளம் எப்படி இருக்கிறது? என்று பொதுவாக பார்க்க கூடாது. ஆடுகளம் எப்படி செயல்படுகிறது? என்றுதான் பார்க்க வேண்டும். கடந்த நான்கு நாட்களாக நாம் பார்த்த வரையில் ஆடுகளம் நன்றாகத்தான் இருந்தது.
இதையும் படிங்க : “நீங்க ரெண்டு பேரும் ஸார்” – ரோகித் டிராவிட்டுக்கு துருவ் ஜுரல் உருக்கமான நன்றி
இந்தியாவில் கடந்த 50 வருடங்களாக ஆடுகளத்தில் பந்தில் கொஞ்சம் சுழற்சியும், தாழ்வான பவுன்சும் இருக்கும்படிதான் அமைக்கப்படுகின்றன. இதில்தான் ஜோ ரூட் சதம் அடிக்க, மற்ற இளம் வீரர்களில் ஜூரல் 90 ரன், கில் 50 ரன் எடுத்தார்கள்” என்று கூறியிருக்கிறார்.