ரிஷப் பண்ட் அடித்த சிக்சர்.. காயம் அடைந்த கேமரா மேன்.. அவருக்காக பண்ட் செய்த நெகிழ்ச்சி செயல்

0
821

ஐபிஎல் திருவிழாவில் நடைபெற்ற 40வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் மோதிய போட்டியில் டெல்லி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியின் போது டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பன்ட் செய்த செயல் ரசிகர்களை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 44 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை விரைவாக இழந்து தடுமாறிய போது, அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் சரிவில் இருந்த அணியை தடுத்து நிறுத்தி சிறப்பாக விளையாடினார்கள்.

- Advertisement -

150 ரன்கள் குவிப்பதே பெரிய விஷயம் என்று இருந்த நிலையில், இவர்கள் இருவரது அதிரடி ஆட்டம் டெல்லி அணியை 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் குவிக்க வைத்தது. ரிஷப் பண்ட் 43 பந்துகளை எதிர் கொண்டு 88 ரன்கள் குவித்தார். இதில் ஐந்து பௌண்டரிகளும், 8 சிக்சர்களும் அடங்கும். இவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த அக்சர் பட்டேல் 43 பந்தில் 66 ரன்கள் குவித்தார்.

ரிஷப் பண்டின் இந்த அதிரடி ஆட்டம் டெல்லி அணிக்கு பெரிதாக உதவியது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணி பரபரப்பான இறுதி கட்டத்தில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியிடம் தோல்வியை தழுவியது. பேட்டிங்கில் மட்டுமின்றி கேப்டன்சியிலும், கீப்பிங்கிலும் ரிஷப் பண்ட் சிறப்பாக செயல்பட்டு, அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் போட்டியின் போது ஒரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. பண்ட் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அவர் அடித்த ஒரு சிக்சர் கேமரா மேனை தாக்கியது. இதில் காயம் அடைந்த கேமரா மேனை உடனடியாக அருகில் இருந்த டெல்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆட்டம் முடிந்த உடன் இந்த தகவல் குறித்து ரிஷப் பண்டிடம் தெரிவிக்கப்பட்டது.

- Advertisement -

பதறிப் போன பண்ட் கேமரா மேனுக்கு ஒன்றும் ஆகவில்லை, நலமாக இருக்கிறார் என்று தெரிந்தவுடன் மன நிம்மதி அடைந்தார். ரிஷப் பண்ட் அவருக்காக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அந்த வீடியோவில் அவர் பேசியது
“என்னை மன்னித்து விடுங்கள். நான் வேண்டும் என்று தாக்கவில்லை. நீங்கள் காயத்தில் இருந்து மீண்டு வந்து திரும்பவும் உங்கள் பணியை சிறப்பாக செய்ய வேண்டும். அதற்காக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:சிஎஸ்கே-க்கு பாடம் எடுத்த டெல்லி.. அடுத்த மேட்ச்லயாவது சரி செய்வாங்களா?.. களத்தில் பிரமிப்பு

பண்டின் இந்த செயலை கண்ட ரசிகர்கள் அவரின் மனிதநேயத்தை கண்டு கொண்டாடி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் டெல்லி அணி தனது 4வது வெற்றியை ருசித்து இருக்கிறது. குஜராத் அணியும், டெல்லி அணியும் ஒன்பது போட்டிகளில் விளையாடி அதில் நான்கு வெற்றியும், ஐந்தில் தோல்வியும் தழுவி இருக்கிறார்கள்.