ஸ்டார்க்கை விட 45 மடங்கு சம்பளம் குறைவு.. இங்க எல்லாம் ஒரு மாயை – ரிங்கு சிங் ஓபன் பேட்டி

0
798
Rinku

ஐபிஎல் தொடரிலிருந்து இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் நம்பிக்கை அளித்த வீரர்களில் சமீப காலத்தில் ரிங்கு சிங் மிகவும் முக்கியமானவராக இருக்கிறார். இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு நட்சத்திர வீரராக இருந்த போதிலும் 55 லட்ச ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்று வருவது குறித்து அவர் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ஆஸ்திரேலியா இடது கை வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க்கை கொல்கத்தா அணி நிர்வாகம் 24.75 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. இந்தத் தொகை ரிங்கு சிங் சம்பளத்தை விட 50 மடங்குக்கு மேலானது. ஐபிஎல் வரலாற்றில் மிக அதிகபட்ச விலை என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் ரிங்கு சிங் 2018 ஆம் ஆண்டு இதே கொல்கத்தா அணியால் 85 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டிருந்தார். ஆனால் 2022 ஆம் ஆண்டு வெறும் 55 லட்ச ரூபாய்க்குதான் மீண்டும் வாங்கப்பட்டார். இப்படியான நிலையில் இருந்துதான் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தன்னை யார் என்று நிரூபித்து, சர்வதேச அணியிலும் இடம் பிடித்தார்.

தற்போது நட்சத்திர வீரராக மாறிவிட்ட போதிலும் குறைவான சம்பளம் கிடைப்பது தொடர்பாகவும், மேலும் ஏற்கனவே கொல்கத்தா அணியில் இருந்த பொழுது வாங்கிய சம்பளத்தை விட குறைவான சம்பளம் கிடைப்பது குறித்தும், ரிங்கு சிங் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

இதுகுறித்து ரிங்கு சிங் கூறும் பொழுது “எனக்கு 55 லட்ச ரூபாய் சம்பளமே பெரிய விஷயம்தான். நான் விளையாட ஆரம்பிக்கும் பொழுது இவ்வளவு சம்பாதிப்பேன் என்று நினைக்கவே கிடையாது. மேலும் என் சிறுவயதில் பத்து, பதினைந்து ரூபாய் கிடைத்தால் போதும் என்று நினைத்தவன். இப்பொழுது எனக்கு 55 லட்சம் ரூபாய் கிடைப்பதால், இது எனக்கு மிகவும் பெரிய தொகை.கடவுள் கொடுப்பதை வைத்து நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : தோத்து கூட போங்க.. ஆனா உலக கோப்பையில இதை மட்டும் செய்யாதிங்க – இந்திய அணிக்கு ஹர்பஜன் சிங் கோரிக்கை

இதுதான் என்னுடைய சிந்தனையாக இருக்கிறது. எனக்கு நிறைய பணம் கிடைத்திருக்க வேண்டும் என நான் நினைக்கவில்லை. இந்த பணத்திலேயே நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னிடம் இதே பணம் இல்லாத பொழுது நான் இதன் மதிப்பை உணர்ந்திருந்தேன். இன்று ஒரு உண்மையைச் சொன்னால் இது எல்லாமே ஒரு மாயை. நீ எதையும் கொண்டு வரவில்லை எதையும் கொண்டு செல்லவும் முடியாது. காலம் எப்போதும் மாறும் என்று உனக்குத் தெரியாது. நான் இதே வழியில் போக வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.