நேற்று ஐபிஎல் தொடரில் முதல் தகுதி சுற்றுப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆர்சிபி அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்து இருக்கிறது. அணியின் வெற்றிக்கான காரணங்கள் குறித்து கேப்டன் ரஜத் பட்டிதார் பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் ஆர்சிபி அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்கள். முதலில் வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களுடைய வேலையை சிறப்பாக செய்ய, இதற்கு அடுத்து பந்து வீச்சுக்கு வந்த சுழல் பந்துவீச்சாளர் சுயாஷ் சர்மா அற்புதமாக பந்து வீசினார். இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 101 ரன்னில் சுருண்டது.
இதேபோல பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சாளர்களுக்கும் ஆடுகளத்தில் இருந்து உதவி கிடைத்தது. இருந்த போதிலும் ஆர்சிபி தொடக்க ஆட்டக்காரர் பின் சால்ட் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தைரியமாக அடித்து விளையாடி 26 பந்தில் 57 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்தார்.
இதைத்தொடர்ந்து ஆர்சிபி அணி நான்காவது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. மேலும் ரஜப் பட்டி தார் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் சீசனிலேயே ஆர்சிபி அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்து இருப்பது அவரது கேப்டன்சிக்கு சிறப்பாக அமைந்திருக்கிறது.
இந்த போட்டி வெற்றி குறித்து ரஜத் பட்டிதார் பேசும்பொழுது “எங்கள் திட்டங்கள் மற்றும் நாங்கள் எப்படி பந்து வீச வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருந்தோம். எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் ஆடுகளத்தை சிறப்பாக பயன்படுத்தினார்கள். மேலும் பின்னர் சுயாஷ் சர்மாவும் சிறப்பாக பந்து வீசினார். அவர் ஸ்டெம்பை நோக்கி பந்து வீசுவதுதான் அவருடைய பலம். சில நேரங்களில் சில ரன்கள் போகலாம். ஆனாலும் நான் அதிக யோசனைகள் கூறி அவரை குழப்ப விரும்பவில்லை”
இதையும் படிங்க : ஆன்டி பிளவர் கிட்ட அத முன்னவே சொல்லிட்டேன்.. மாறுவேஷத்துல அந்த ஆசீர்வாதம் கிடைச்சது – பில் சால்ட் பேச்சு
“இந்தத் தொடர் முழுவதும் நாங்கள் கடினமாக பயிற்சிகள் செய்து இருக்கிறோம். எனவே பிளே ஆப் சுற்றில் நேரம் கிடைக்காமல் ஒருநாள் பயிற்சி செய்யாமல் இருப்பதால் எந்த தீங்கும் நடக்காது. மேலும் பில் சால்ட் பேட்டிங் செய்யும் விதத்திற்கு நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன். எங்கு சென்றாலும் சொந்த மைதானம் போல எங்கள் ரசிகர்கள் உணர வைக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய பெரிய நன்றி. இப்போது நீங்கள் கொண்டாடுங்கள். இன்னும் ஒரு போட்டி தான் இருக்கிறது, அதை வென்று நாம் சேர்ந்து கொண்டாடலாம்” என்று கூறி இருக்கிறார்.