ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்து சாம்பியன் பட்டம் வென்று, யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பினார். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பொறுப்பில் நீக்கப்பட்டு, கேப்டன் பதவி ஹர்திக் பாண்டியாவுக்கு கொடுக்கப்பட்டது.
இதன் காரணமாக ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் என இரண்டு அணியின் ரசிகர்களிடமும் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார். ஒரு இந்திய நட்சத்திர வீரர் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் இவ்வளவு தூரம் எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது இதுவே முதல் முறை. தற்பொழுது பெருகிவரும் ஐபிஎல் ரசிக கலாச்சாரம் கவலை அளிப்பதாக மாறி இருக்கிறது.
இதுகுறித்து இந்திய அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “ஹர்திக் பாண்டியா விஷயத்தில் அவரோ இல்லை அணி நிர்வாகமோ தவறு செய்யவில்லை.இது முழுக்க ரசிகர்களின் பொறுப்பு. ரசிகப் போர்கள் மிகவும் அசிங்கமாக மாறி வருகின்றன. எங்களுடைய கமெண்ட் செக்ஷனில் பார்த்தால், விராட் கோலி மற்றும் தோனி பற்றி மக்கள் பேசுவது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இருவரும் பெரிய ஜாம்பவான்கள். இந்திய கிரிக்கெட்டின் தூண்கள்.
ஜோ ரூட் மற்றும் ஜாக் கிரவுலி ரசிகர்கள் இங்கிலாந்தில் சண்டையிடுவதை பார்த்திருக்கிறீர்களா? மேலும் இதே போல் ஒரே நாட்டு ரசிகர்கள் எங்கு சண்டையிடுகிறார்கள்? ஆஸ்திரேலியாவில் கம்மின்ஸ் மற்றும் ஸ்மித் ரசிகர்கள் சண்டையிடுகிறார்களா? இது முழுக்க முழுக்க பைத்தியக்காரத்தனம் இதை இந்தியாவில் மட்டுமே பார்க்கிறேன்.
இது கிரிக்கெட். மீண்டும் மீண்டும் சொல்கிறேன் இது ஒரு சினிமா கலாச்சாரம். ஆனால் ரசிக சண்டைகள் என்பது அசிங்கமானதாக மாறக்கூடாது. இவர்கள் நம்முடைய சொந்த நாட்டு கிரிக்கெட் வீரர்கள். உங்கள் சொந்த வீரரை பார்த்து ஏன் கத்துகிறீர்கள். மேலும் இதற்கு முன் இப்படி நடக்காதது போல் ஏன் நடிக்கிறீர்கள். சச்சின் கங்குலி கீழும், இவர்கள் இருவரும் ராகுல் டிராவிட் கீழும், இந்த மூவரும் தோனியின் கீழும் விளையாடி இருக்கிறார்கள்.
இதையும் படிங்க : லக்னோ அணிக்கு 6 வருடத்திற்கு பிறகு ஐபிஎல் திரும்பும் நியூஸி வீரர்.. ஷாமர் ஜோசப் விளையாடுவாரா?
நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஹீரோக்கள் வழிபாடு இருக்கட்டும். ஆனால் ஒருவரை உயர்ந்தவராக காட்ட இன்னொருவரை தாழ்வாக பேசக்கூடாது. இந்த பழக்கம் நம் நாட்டில் மறைந்து போக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.