கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு நடைபெற்ற மினி ஏலத்தில் இந்திய வீரர் ரகானேவை 50 லட்சம் ரூபாய்க்கு சிஎஸ்கே அணி வாங்கியது. மேலும் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரை வென்றதில் ரகானேவின் பங்கும் முக்கியமாக இருந்தது. தோனியின் கேப்டன்சியின் கீழ் விளையாடுவது எப்படிப்பட்டது என ரகானே பேசி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழி நடத்திய கேப்டனாக இருந்து பின் நாட்களில் அவர் ஐபிஎல் தொடரில் எந்த அணிகளாலும் வாங்கப்படாமல் போனார். கடந்த ஆண்டு சிஎஸ்கே அணி அவரது அடிப்படை விலையான ₹50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது. வாங்கியதோடு அவருக்கான ரோலை கொடுத்து மூன்றாவது இடத்தில் தைரியமாக களம் இறக்கியது.
தன்னுடைய சொந்த மாநிலமான மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த ஆண்டு மும்பைக்கு எதிராக அதிரடியாக விளையாடி சிஎஸ்கே அணியை வெற்றி பெற வைத்தார். மேலும் கடந்த தொடர் முழுவதும் சிஎஸ்கே அணிக்கு தாக்கத்தை தரக்கூடிய அளவில் விளையாடியிருந்தார்.
நடப்பு ஐபிஎல் தொடரிலும் ரகானேவுக்கு எந்தவித முக்கியத்துவத்தையும் குறைக்காமல் சிஎஸ்கே அணி தொடர்ந்து அவரை மூன்றாவது இடத்தில் நம்பி விளையாட வைத்து வருகிறது. இந்த நிலையில் மகேந்திர சிங் தோனியின் கேப்டன்சி கீழ் இந்தியா மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு விளையாடிய அனுபவம் குறித்து ரகானே பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “வேறொரு கண்ணோட்டத்தில் கூறுவதாக இருந்தால், நாங்கள் விளையாடும் எல்லா போட்டிகளுமே எங்களுடைய சொந்த மைதானத்தில் விளையாடுவது போலவே இருக்கிறது. காரணம் ஒரே ஒருவர் தோனி மட்டும்தான். இது ஒரு அற்புதமான உணர்வு. மேலும் நாம் அவருடன் விளையாடும் பொழுது அவர் ஒரு கிரிக்கெட் வீரராக மனிதராக எப்படி நடந்து கொள்கிறார்? ஒரு போட்டியை எப்படி ஒருங்கிணைக்கிறார் என்று பல விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். தற்போது சிஎஸ்கே அணியில் மும்பை மற்றும் மகாராஷ்டிரா வீரர்கள் இருக்கிறோம். அணியின் சூழல் மிக நன்றாக இருக்கிறது.
இதையும் படிங்க : ருதுராஜ் ஒரு ஏழைக் குழந்தை.. ஆனால் முதல் வலைப்பயிற்சியில் நான் அவரிடம் அதை பார்த்தேன் – மைக் ஹசி பேட்டி
நான் 2011 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டர் மைதானத்தில் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான பொழுது, எனது முதல் போட்டிக்கான எல்லாவிதப் பயிற்சிகளையும் முடித்துக் கொண்டு இருந்தேன். அப்பொழுது என்னிடம் தோனி ‘நீங்கள் இதுவரை எப்படி பயிற்சி செய்து தயாரானீர்களோ அதே போல உங்கள் வழியிலேயே உங்களை வெளிப்படுத்தி மைதானத்தில் விளையாடுங்கள். எந்த அழுத்தமும் கிடையாது’ என்று கூறினார். இதே போல நான் சிஎஸ்கே அணிக்கு வந்த பொழுதும் இதையேதான் கூறினார். இதனால்தான் அவர் எப்பொழுதும் கிரேட் ஆக இருக்கிறார். அவர் ஒவ்வொரு தனி நபர் மீதும் கவனம் செலுத்தி அக்கறையாக நடந்து கொள்ளக் கூடியவர்” என்று கூறியிருக்கிறார்.