“அப்ப கோலி கோபப்பட்டதுக்கு காரணமே வேற.. இன்னொருத்தரும் ஸ்லெட்ஜ் பண்ணாரு” – உண்மையை சொன்ன நவீன் உல் ஹக்

0
278
Naveen

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதி கொண்ட போட்டி மிகவும் பரபரப்பான போட்டியாக அமைந்தது. அந்த போட்டியில் லக்னோ அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதற்கு அடுத்து லக்னோவில் வைத்து இந்த இரண்டு அணிகளும் மோதிக் கொண்ட போட்டியில், லக்னோ அணியை எளிதாக பெங்களூர் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியின் போது பெங்களூர் அணியின் விராட் கோலி மற்றும் லக்னோ அணியின் மெண்டர் கௌதம் கம்பீர் நவீன் உல் ஹக் ஆகியோரிடையே நடு மைதானத்தில் வாக்குவாதங்கள் உருவானது. இது ஐபிஎல் களத்தில் எப்பொழுதும் பார்த்திராத அளவுக்கு கொதிப்பானதாக இருந்தது.

தற்பொழுது இதில் நேரடியாக சம்பந்தப்பட்ட நவீன் உல் ஹக் கூறும் பொழுது “நான் பிரச்சனை நடந்த போட்டியின் போது ஒன்பதாவது ஆகவோ இல்லை பத்தாவது ஆகவோ பேட்டிங் செய்யப் போனேன். அப்பொழுது நாங்கள் ஆட்டத்தில் ஏறக்குறைய தோற்று விட்டோம். இப்படி ஒரு நிலையில் ஆட்டம் இருக்கும் பொழுது நான் ஸ்லெட்ஜ் செய்யப்படுவேன் என்று நினைக்கவில்லை. ஆனால் விராட் கோலி மட்டுமில்லாமல் முகமது சிராஜூம் சேர்ந்து ஸ்லெட்ஜிங் செய்தார்.

நான் ஏற்கனவே கூறியுள்ளதைப் போல, நானாக யாரிடமும் எதுவும் செய்ய மாட்டேன், ஆனால் என்னிடம் யாராவது ஏதாவது செய்தால் நான் விட்டு தந்து விட்டு வர மாட்டேன். இந்த வகையில் தான் அன்று நான் அவர்களுக்கு எதிராக பேசினேன்.

- Advertisement -

இந்த பிரச்சனைக்கு முன்பாக பெங்களூரில் வைத்து நடைபெற்ற போட்டி மிகவும் நெருக்கமான போட்டியாக அமைந்தது. அவர்கள் ஒரு ரன் அவுட்டை செய்யாமல் விட்டு ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோற்றார்கள். அப்பொழுது எங்கள் அணியின் ஆவேஷ் கான் ஹெல்மட்டை கழட்டி தரையில் அடித்துக் கொண்டாடினார். இதுதான் விராட் கோலியை கோபப்படுத்தி இருக்கும் என்று நினைக்கிறேன். அதுதான் அடுத்து லக்னோவில் போட்டி நடைபெற்ற பொழுது பிரச்சனைக்கு காரணமாகிவிட்டது.

பெங்களூரில் முதலில் நடந்த அந்தப் போட்டியில் மிகவும் நெருக்கமாக சென்று ஒரு விக்கெட் வித்தியாசத்தில் முடிந்த காரணத்தினால், ரசிகர்களை அமைதிப்படுத்துவதற்காக கௌதம் கம்பீர் வாயில் விரல் வைத்து அமைதியாக இருக்கும்படி கூறினார். விராட் கோலியும் உணர்ச்சிகரமான வீரர். இதெல்லாம் பிரச்சனைக்கு காரணமாகிவிட்டது. மேலும் லக்னோவில் நடந்த போட்டியில் அது களத்தில் தொடர்ந்ததோடு கைகுலுக்கும் போதும் தொடர்ந்தது.

இதையும் படிங்க : “அஸ்வின் லயன் மாதிரி கிடையாது.. வெயிட் பண்ண மாட்டாரு.. வேற மாதிரி ரகம்” – ஜோ ரூட் சொன்ன சுவாரசிய தகவல்

நீண்ட நாட்கள் கழித்து நாங்கள் இருவரும் போட்டியில் சந்தித்துக் கொண்ட பொழுது, இதை இத்தோடு முடித்துக் கொள்ளலாம், இனி உங்களை எந்த இடத்திலும் கூட்டம் தொந்தரவு செய்யாது என்று கூறினார். பிரச்சனை அத்தோடு முடிவுக்கு வந்தது” எனக் கூறி இருக்கிறார்.