நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் தொடர்ந்து மூன்றாவது போட்டியிலும் தோல்வியடைந்து இருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் குஜராத் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக வலிமைதானத்தில் விளையாடி தோல்வி அடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி, இன்று ராஜஸ்தான் ராயல் அணிக்கு எதிராக சொந்த மைதானத்தில் விளையாடி தோல்வி அடைந்திருக்கிறது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியை பேட்டிங் செய்ய வைத்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆரம்பமே மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. ரோகித் சர்மா டிவால்ட் பிரிவியஸ், நமன் திர் என டாப் ஆர்டரில் மூன்று பேரும் கோல்டன் டக் அடித்தார்கள். டிரெண்ட் போல்ட் பந்துவீச்சில் அனல் பறந்தது.
இன்னொரு பக்கத்தில் தென் ஆப்பிரிக்காவின் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் பர்கர் அசத்தினார். நடுவில் வந்த சுழல் பந்துவீச்சாளர் சாகல் வேகப்பந்துவீச்சாளர்கள் தந்த துவக்கத்தை மிகச் சிறப்பாக புத்திசாலித்தனமாக பயன்படுத்தி ஒட்டுமொத்தமாக மும்பை இந்தியன்ஸ் அணியை 125 ரன்களுக்கு சுருட்ட உதவி செய்தார்.
சிறிய இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மேல் வரிசையில் பட்லர் ஜெய்ஷ்வால் மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சன் மூவரும் பெரிய ரன்கள் இல்லாமல் வெளியேறினார்கள். இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் மிகச்சிறந்த முறையில் வந்திருக்கும் இளம் வீரர் ரியான் பராக் 39 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 54 ரன்கள் எடுத்து 15.3 ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெல்ல வைத்தார். மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. மூன்றாவது போட்டியிலும் தோல்வி அடைந்த மும்பை இந்தியன்ஸ் புள்ளி பட்டியலில் கடைசி இடத்துக்கு சரிந்தது.
தோல்விக்குப்பின் பேசிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறும் பொழுது “இது எங்களுக்கு ஒரு மோசமான இரவாக அமைந்திருக்கிறது. நாங்கள் விரும்பிய வழியில் போட்டியை துவங்கவில்லை. நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கவுண்டர் அட்டாக் பண்ண நினைத்தேன். ஆரம்பத்தில் விக்கட்டுகளை இழந்த போதிலும் நாங்கள் 150 முதல் 160 ரன்கள் எடுக்கும் நிலையில் இருந்தோம். ஆனால் என்னுடைய விக்கெட் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஆட்டத்திற்குள் கொண்டு வந்து விட்டது. நான் இன்னும் நிறைய செய்ய வேண்டி இருக்கிறது.
இதையும் படிங்க : 15.3 ஓவர்.. மும்பை இந்தியன்ஸை புரட்டி எடுத்த ராஜஸ்தான்.. புள்ளி பட்டியலில் ட்விஸ்ட்
நாங்கள் இப்படி ஒரு ஆடுகளத்தை எதிர்பார்க்கவில்லை. நாங்கள் சரியான விஷயங்களை செய்ய வேண்டும். சில நேரம் முடிவுகள் நல்ல பலனை தரும், சில நேரங்களில் தராது. ஒரு அணியாக எங்களால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறோம். நாங்கள் இன்னும் கொஞ்சம் ஒழுங்காக இருக்க வேண்டும் மேலும் தைரியத்துடன் செயல்பட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.