நேற்று சிஎஸ்கே மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், சிஎஸ்கே அணியில் மொயின் அலி இடம்பெற்று இருந்தார். ஆனால் பேட்டிங் வரிசையில் ரவீந்திர ஜடேஜா மேலே வந்தது விமர்சனத்தை உருவாக்கி இருக்கிறது. ஜடேஜாவை மேலே அனுப்பி இருக்கக் கூடாது என மேத்யூ ஹைடன் கூறியிருக்கிறார்.
நேற்றைய போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு மிடில் ஓவரில் சிவம் துபே நான்கு சிக்ஸர்களை அடித்து 200 ரன்கள் நோக்கி போவதற்கான ஒரு வேகத்தை உருவாக்கினார். அந்த இடத்தில் சுதாரித்த ஹைதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் மெதுவான ஆடுகளத்தை பயன்படுத்தி சிவம் துபேவை வெளியேற்றினார்.
இந்த நிலையில் இடது கை பேட்ஸ்மேன் சிவம் துபே வெளியேற, அவருடைய இடத்தில் நேற்று சிஎஸ்கே அணியில் இடம் பெற்ற இடதுகை பேட்டிங் ஆல் ரவுண்டர் மொயின் அலி களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் ஓரளவுக்கு அதிரடியாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக ஆங்கர் ரோல் செய்யும் ரவீந்திர ஜடேஜா களம் இறக்கப்பட்டார்.
நேற்று அவர் 23 பந்துகள் சந்தித்து மொத்தம் 31 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரிடமிருந்து சிக்ஸர்கள் ஏதும் வரவில்லை. கடைசியில் மொயின் அலி பேட்டிங் செய்யும் வாய்ப்பே அமையவில்லை. மேலும் நேற்றைய போட்டியில் அவரை பந்து வீச்சுக்கும் மிக தாமதமாகவே கொண்டு வந்தார்கள். அவர் வந்துதான் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இப்படி சிஎஸ்கே அணியின் தரப்பில் நேற்று திட்ட ரீதியாக நிறைய தவறுகள் நடைபெற்றது. மேலும் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடும் மகேந்திர சிங் தோனியும் மூன்று பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் தான் பேட்டிங் செய்ய வந்தார். இதெல்லாம் சேர்ந்து சிஎஸ்கே அணிக்கு தோல்விக்கு காரணமாக அமைந்ததோடு, அந்த அணியின் திட்டங்கள் குறித்த விமர்சனமும் அதிகமாகி இருக்கிறது.
இதையும் படிங்க : கேப்டன்சியில அடுத்த தோனி கம்மின்ஸ்தான்.. நாம் யோசிக்காத இந்த முடிவுகளை நேற்று எடுத்தார் – டாம் மூடி பேச்சு
இதுகுறித்து பேசி உள்ள முன்னாள் சிஎஸ்கே வீரர் மேத்யூ ஹைடன் கூறும்பொழுது “சிவம் துபே மீண்டும் மிடில் ஓவர்களில் மிகச் சிறப்பாக விளையாடினார். உள்ளே வந்து இரண்டு பெரிய சிக்சர்களை அடித்தார். இதே போல ருதுராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் செய்வார்கள் என நான் எதிர்பார்த்தேன். ஆனால் நேற்று அவர்கள் இதைச் செய்யவில்லை. மேலும் ஜடேஜா பேட்டிங்கில் ஃப்ளோவாக இல்லை. அந்த நேரத்தில் பேட்டிங்கில் தேவைப்பட்ட வேகத்தை கொடுப்பதற்கு மொயின் அலி சரியான வீரராக இருப்பார் என நான் நினைத்தேன்.களம் இறக்கப்பட்ட ஜடேஜா அந்த வேகத்திற்கு விளையாடவில்லை” என்று கூறி இருக்கிறார்.