மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா பேட்டிங் பார்ம் தொடர்ந்து கவலைக்குரிய வகையில் அமைந்துள்ளது.
நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா 5 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறிய போது, டிரெஸ்ஸிங் ரூமில் அவர் வருத்தத்தை வெளிப்படுத்திய காணொளி தற்போது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சன்ரைசர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இரண்டு அணிகளுக்குமே நேற்று நடைபெற்ற போட்டி மிகவும் முக்கியமாக இருந்தது. தோல்வி பாதையில் இருந்து வெற்றிப்பாதையை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணியும், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பில் சன்ரைசர்ஸ் அணியும் விளையாடின. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது.
சன்ரைசர்ஸ் அணியில் அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 48 ரன்களும், அணியின் கேப்டன் கம்மின்ஸ் 17 பந்துகளில் 35 ரன்கள் குவித்தனர். மும்பை அணி தரப்பில் பியூஸ் சாவ்லா மற்றும் பாண்டியா ஆகியோர் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா நான்கு பந்துகளில் நான்கு ரன்கள் குவித்த நிலையில் கம்மின்ஸ் வீசிய ஐந்தாவது பந்தை ஸ்கொயர் திசையில் ப்ளிக் ஷாட் ஆட முயன்று மார்க்கோ ஜான்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ரோகித் சர்மா கடந்த ஐந்து ஆட்டங்களாக மோசமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தி இருக்கிறார். கடந்த ஐந்து ஆட்டங்களில் முறையே 6, 8, 4,11, 4 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். இவர் கடந்த மாதம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக கடைசி வரை ஆட்டமிழக்காமல் 104 ரன்கள் குவித்தார். இருப்பினும் அந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே வெற்றி பெற்றது.
ரசிகர்கள் வருத்தம்
டி20 உலக கோப்பை தொடங்க இன்னும் ஒரு மாதம் மட்டும் இருக்கும் நிலையில் இந்திய அணியின் கேப்டன் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மாவின் பேட்டி பார்ம் தற்போது கவலைக்குரிய வகையில் அமைந்துள்ளது. அவர் நேற்றைய போட்டியில் 4 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அப்போது ட்ரெஸ்ஸிங் ரூமில் அவர் சோகமாக அழுவது போன்ற காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது. அதனைக் கண்ட இந்திய அணியின் ரசிகர்கள் மற்றும் ரோகித் சர்மா ரசிகர்கள் தற்போது வருத்தத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க:எங்க கோட்டை ஹைதராபாத்துக்கு வாங்க.. பெரிய வானவேடிக்கை காத்திருக்கு – பாட் கம்மின்ஸ் சவால்
இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 330 ரன்கள் குவித்துள்ளார். அவரது பேட்டிங் ஆவரேஜ் 30 மற்றும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 152.78 ஆக அமைந்துள்ளது. ஐபிஎல்லின் தொடக்கத்தில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி வந்தாலும், கடைசியாக அவர் விளையாடிய ஐந்து போட்டிகளில் அவரது பேட்டிங் ஃபார்ம் கவலைக்குரிய வகையில் அமைந்துள்ளது. அவர் ஐபிஎல்லில் எப்படி விளையாடினாலும் இந்திய அணிக்காக அவர் விளையாடும் போது அவரது பேட்டிங் ஃபார்ம் வேறு மாதிரி இருக்கும். எனவே இது குறித்து பெரிதாக கவலை கொள்ள தேவையில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.