ஐசிசி நடத்தும் டி20 உலகக்கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் முதல் வாரம் ஆரம்பத்தில் நடக்க இருக்கிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணி கடந்த வாரத்தில் அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் பிசிசிஐ புதிய பயிற்சியாளரை தேடி வருகிறது. தற்பொழுது கவுதம் கம்பீர் புதிய பயிற்சியாளராக இந்திய அணிக்கு வருவாரா? என்பது குறித்தான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கவுதம் கம்பீர் இந்திய அணிக்காக 2003ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் பங்களாதேஷ அணிக்கு எதிராக அறிமுகமானார். அடுத்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அறிமுகமானார். 2007ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக அறிமுகமானார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 147 போட்டிகளில் 11 சதங்களுடன் 5238 ரன்கள், 58 டெஸ்ட் போட்டிகளில் 9 சதங்களுடன் 4154 ரன்கள், 37 டி20 போட்டிகளில் 7 அரை சதங்களுடன் 932 ரன்கள் எடுத்திருக்கிறார். மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இவர் விளையாடிய பொழுது இந்திய அணிக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கி இருக்கிறார்.
மேலும் ஐபிஎல் தொடரில் மென்டராக லக்னோ அணிக்கு 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் இருந்தார். இந்த ஆண்டுகளில் லக்னோ அணி பிளே ஆப் சுற்றுக்கு சென்றது. இந்த ஆண்டுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் பிளே ஆப் சுற்றுக்கு செல்லாத கொல்கத்தா அணியை, இந்த ஆண்டு கம்பீர் மென்டர் ஆன பிறகு புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் கவுதம் கம்பீர் இடம் இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் பொறுப்புக்கு அணுகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் கிரிக்கெட் வர்ணனையில் அபினவ் முகுந்த் இது குறித்து பேசி இருந்தார். இந்த ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் 2027 ஆம் ஆண்டு டிசம்பர் வரையில் புதிய பயிற்சியாளர் பொறுப்பில் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சிஎஸ்கே கேப்டனா வர வேண்டியது நான்தான்.. கடைசில இது நடந்திருச்சு – சேவாக் வெளியிட்ட தகவல்
தற்பொழுது பிசிசிஐ ரிக்கி பாண்டிங், ஸ்டீபன் பிளமிங், லட்சுமணன் ஆகியோரை தங்களது லிஸ்டில் வைத்திருக்கிறது. அதே சமயத்தில் பிசிசிஐ லிஸ்டில் கவுதம் கம்பீருக்கு முதல் இடம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதிகப்படியான வாய்ப்புகள் கம்பீருக்கே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.