16.1 ஓவர்.. சுருண்ட லக்னோ.. கொல்கத்தா சிஎஸ்கேவுக்கு செய்த உதவி.. பிளே ஆப் வாய்ப்பில் ஏற்பட்ட மாற்றம்

0
5952
KKR

இன்று ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியில், லக்னோ மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 98 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று கொல்கத்தா புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறது.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற லக்னோ முதலில் பந்து வீசுவது என அறிவித்தது. வழக்கம்போல கொல்கத்தா அணி பவர் பிளேவில் பட்டையைக் கிளப்பியது. வெறும் 26 பந்துகளில் 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்து இருந்த நிலையில், பில் சால்ட் 14 பந்தில் 32 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து சுனில் நரைன் உடன் ரகுவன்சி இணைந்தார். இந்த ஜோடி 46 பந்துகளில் 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இந்த போட்டியிலும் அதிரடியில் மிரட்டிய சுனில் நரைன் வெறும் 39 பந்துகளில் 6 பௌண்டரி மற்றும் 7 சிக்ஸர்களுடன் 81 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து ரகுவன்சி 26 பந்தில் 32, ஸ்ரேயாஸ் ஐயர் 15 பந்தில் 23, ரமன்தீப் சிங் 6 பந்தில் அதிரடியாக 25 ரன்கள் எடுத்த, கொல்கத்தா 6 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது. நவீன் உல் ஹக் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணிக்கு மிக அதிகபட்சமாக ஸ்டோய்னிஸ் 21 பந்தில் 36 ரன்கள், கேப்டன் கேஎல்.ராகுல் 21 பந்தில் 25 ரன்கள் எடுத்தார்கள். இதற்கு அடுத்து அதிகபட்சமாக ஆஸ்டன் டர்னர் 16 ரன்கள் எடுத்ததுதான் இருக்கிறது.

இறுதியாக லக்னோ அணி 16.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதை எடுத்து கொல்கத்தா அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அந்த அணியின் வருண் சக்கரவர்த்தி மற்றும் ஹர்ஷித் ரானா தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : சிஎஸ்கே ஐபிஎல் வரலாறு.. தல தோனியை தாண்டி தளபதி ஜடேஜா செய்த மெகா சாதனை

11வது போட்டியில் விளையாடிய கொல்கத்தாவுக்கு இது எட்டாவது வெற்றியாகும். மேலும் +1.453 என்ற பெரிய ரன் ரேட் உடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. 10 போட்டிகளில் 8 வெற்றிகள் உடன் ராஜஸ்தான் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் சென்னை மற்றும் ஹைதராபாத் இருக்கிறது. ரன் ரேட்டை இழந்த லக்னோ அணி ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. லக்னோவை பெரிய ரன் ரேட்டில் வீழ்த்தி, சிஎஸ்கே அணியின் ப்ளே ஆப் வாய்ப்புக்கு கொல்கத்தா உதவி செய்திருக்கிறது.