2024 ஐ பி எல் 17வது சீசனில் இன்று பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில், ஆர்சிபி அணியும் கேகேஆர் அணியும் மோதி கொண்ட போட்டி நடைபெற்றது. ஆர்சிபி அணி முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியிடம் தோற்று இரண்டாவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் வெற்றி பெற்று இருந்தது. கேகேஆர் அணி தனது முதல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை வென்று இருந்தது.
இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற கேகேஆர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆர்சிபி அணிக்கு கேப்டன் பாப் டு பிளிசிஸ் 8(6), கேமரூன் கிரீன் 33 (21), மேக்ஸ்வெல் 28 (19), ரஜத் பட்டிதார் 3(4), அனுஜ் ராவத் 3(3) ரன்களில்ல் ஆட்டம் இழந்தார்கள். கடைசியில் வந்த தினேஷ் கார்த்திக் அதிரடியாக எட்டு பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். இறுதிவரை நிலைத்து நின்று ஆட்டம் இழக்காமல் விளையாடிய விராட் கோலி 59 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 83 ரன்கள் எடுத்தார்.
20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. பவர் பிளேவில் அதிரடியாக 61 ரன்கள் குவித்த ஆர்சிபி அணியால், அதற்கு அடுத்து வந்த சுழற் பந்துவீச்சுக்கு எதிராக பெரிய அளவில் ரன்கள் குவிக்க முடியவில்லை. கே கே ஆர் அணியின் தரப்பில் ரசல் மற்றும் ஹர்ஷித் ராணா இருவரும் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்கள்.
கடந்த ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது கேகேஆர் அணிக்கு துவக்க ஆட்டக்காரராக அனுப்பப்பட்ட சுனில் நரைன் இந்த முறையும் அனுப்பப்பட்டார். ஆனால் இந்த முறையில் அதிரடியில் அவர் மிரட்டினார். சுனில் நரைன் மற்றும் பில் சால்ட் ஜோடி பவர் பிளேவில் 85 ரன்கள் குவித்தது. இந்த வருடம் பவர் பிளேவில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் இதுதான்.
மொத்தம் 6.3 ஓவர் விளையாடிய இந்த ஜோடி 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. சுனில் நரைன் 22 பந்துகளில் 2 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் உடன் 47 ரன்கள் குவித்தார். இன்னொரு துவக்க ஆட்டக்காரர் பில் சால்ட் 20 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் உடன் 30 ரன் எடுத்தார். கேகேஆர் அணி 10 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்தது.
இதற்கு அடுத்து வெங்கடேஷ் ஐயர் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் ஜோடி சேர்ந்தார்கள். இவர்களும் ஆர்சிபி அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார்கள். மிகச்சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 29 பந்துகளில் அரைசதம் அடித்தார். இறுதியாக 30 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 50 ரன்கள் வெங்கடேஷ் ஐயர் ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 44 பந்துகளில் 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
இதையும் படிங்க: கோலி ஒரு மாஸ் ஐபிஎல் சாதனை.. ஒரு மெகா உலக சாதனை.. கேகேஆர்-க்கு எதிராக ஆர்சிபி ரன் குவிப்பு
இதற்கு அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் 24 பந்தில் 39 ரன், ரிங்கு சிங் 5 பந்தில் 5 ரன் எடுக்க, 16.5 ஓவரில் கேகேஆர் அணி இலக்க எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் இரண்டாவது வெற்றியைத் தொடர்ந்து பெற்றது. 2015 ஆம் ஆண்டு முதல் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கேகேஆர் அணியை வென்றதில்லை எனும் ஆர்சிபியின் சோகம் இம்முறையும் தொடர்கிறது.