கிரிக்கெட்டை விளம்பரப்படுத்த மட்டுமே என்னை டி20 இந்திய அணியில் வச்சிருக்காங்க – விராட் கோலி பேச்சு

0
870
Virat

இன்று ஐபிஎல் தொடரில் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் 19.2 ஓவரில் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருந்த ஆர்சிபி அணிக்கு இது முதல் வெற்றியாகும்.

இந்த போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷிகர் தவான் 39 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சராசரியான பங்களிப்பு கொடுக்க, பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய முகமது சிராஜ் மற்றும் யாஸ் தயால் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணிக்கு நட்சத்திர வீரர்களில் விராட் கோலி மட்டுமே 49 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். பாப் டு பிளிசிஸ், கேமரூன் கிரீன் மற்றும் மேக்ஸ்வெல் என மூன்று பேருமே தலா 3 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். சிஎஸ்கே அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய அனுஜ் ராவத் இந்த முறை 14 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.

இதை எடுத்து ஆர்சிபி வெற்றிக்கு கடைசி நான்கு ஓவர்களில் 47 ரன்கள் தேவைப்பட்டபோது தினேஷ் கார்த்திக் 10 பந்தில் 28 ரன், மகிபால் லோம்ரர் 8 பந்தில் 17 ரன்கள் எடுத்து, நான்கு பந்து மீதம் இருக்கும் பொழுது, 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வெற்றி பெற வைத்தார்கள். பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் ஹர்பரித் பிரார் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற விராட் கோலி பேசும் பொழுது “இந்த மைதானத்தில் ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் அன்பும் ஆதரவும் மிகவும் ஆச்சரியமானது. இது பல ஆண்டுகளாக எனக்கு தொடர்ந்து இங்கு கிடைத்து வருகிறது. நாம் விளையாட்டை விளையாடும் பொழுது மக்கள் சாதனை மற்றும் புள்ளிவிபரங்கள் என்று நிறைய பேசுகிறார்கள். எல்லாமே கடந்த கால நினைவுகளாக மட்டுமே நிற்கும். நான் அணிக்கு நல்ல துவக்கத்தை கொடுக்க முயற்சி செய்கிறேன். ஆனால் விக்கெட்டுகள் விழும் பொழுது ஆட்டத்தை மதிப்பீடு செய்ய வேண்டும். இது பேட்டிங் செய்வதற்கு வழக்கமான தட்டையான ஆடுகளம் கிடையாது.

- Advertisement -

நான் கவர் ட்ரைவ் நன்றாக விளையாடுவேன் என்று அவர்களுக்கு தெரியும். எனவே என்னை பாய்ண்ட் திசையில் விளையாட வைக்க இழுத்தார்கள். நான் அதை வெட்டி விளையாட போகும் பொழுது, பந்து டீப் பாயிண்டில் கேட்ச் ஆகிவிட்டது. ஆட்டத்தை முடிக்காமல் வெளியேறியது மிகுந்த ஏமாற்றத்தை தந்தது.

இதையும் படிங்க : பினிஷராக கலக்கிய தினேஷ் கார்த்திக்.. 10 பந்துகளில் மேஜிக்.. பஞ்சாபை ஆர்சிபி வீழ்த்தி அசத்தல்

மேலும் தற்போது டி20 கிரிக்கெட்டை உலகம் முழுவதும் விளம்பரப்படுத்துவதற்காக மட்டுமே என்னை இந்திய டி20 அணியில் இணைத்து இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். கடந்த இரண்டு மாதங்கள் குடும்பத்துடன் நேரம் செலவு செய்வதற்கு வாய்ப்பு அமர்ந்ததற்கு கடவுளுக்கு நன்றி உள்ளவனாக இருக்கிறேன். ஒரு சாலையில் எல்லோரும் போல சாதாரணமாக, யாரும் அடையாளம் கண்டு கொள்ள முடியாதபடி இருந்தது மிகவும் அற்புதமான அனுபவமாக அமைந்தது. நான் இங்கு ரசிகர்களுக்கு கொடுக்கக்கூடிய வாக்குறுதி ஒன்றுதான், நான் உங்களுக்கு தொடர்ந்து சிறந்ததை கொடுக்க முயற்சி செய்வேன்” என்று கூறி இருக்கிறார்.