இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கி இதுவரை 10 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்த பத்து போட்டிகளின் முடிவில் வலுவான அணிகள் என்று கருதப்பட்டவை ஐபிஎல் 2024 புள்ளி பட்டியலில் அதள பாதாளத்திலும், வலு குறைந்த அணி சற்று எழுச்சி பெற்றும் இருக்கின்றன.
இதில் முக்கியமாக பார்க்கப்படும் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் வலுவாக முதலிடத்தில் இருக்கிறது. முதல் போட்டியில் பெங்களூர் அணியுடன் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி அதன் பிறகு குஜராத் அணியுடன் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ரன் ரேட்டில் +1.979 என்று மற்ற அணிகளை காட்டிலும் வலுவான நிலையில் உள்ளது.
இதில் டெல்லி அணியுடன் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் அணி இரண்டாவது இடத்தில் இருந்தது. நேற்று நடைபெற்ற பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் கொல்கத்தா அணி 182 ரன்கள் இலக்கை 17 ஓவர்களிலேயே சேஸ் செய்து வெற்றி பெற்றதால் தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மூன்றாவது இடத்திற்கு தள்ளி இருக்கிறது.
வலுவான பேட்டிங் வரிசை கொண்ட சன்ரைசர்ஸ் அணி இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி ஒரு தோல்வி என நான்காவது இடத்திலும், தவான் தலைமையிலான பஞ்சாப் அணியும் சன்ரைசர்ஸ் அணியை போன்று ஒரு வெற்றி ஒரு தோல்வி என்று ஐந்தாவது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, இரண்டு மோசமான தோல்விகள் என்று ஆறாவது இடத்தில் இருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் அணி பரிதாபம்
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு கடப்பாரை பேட்டிங் வரிசை என்று அழைக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து தற்போது பரிதாப நிலையில் இருக்கிறது. குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் நெருங்கி வந்து தோல்வி அடைந்த மும்பை அணி, சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெரிய இலக்கை துரத்தி வந்து இறுதியில் ரன்கள் குவிக்க முடியாததால் தோல்வி அடைந்தது.
தற்போது மும்பை அணி இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து ரன் ரேட்டில் -0.925 என்று புள்ளி பட்டியலில் தற்போது ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. இனி அந்த அணி பிளே ஆஃப்க்கு தகுதி பெற விரும்பினால் மற்ற அணிகளை காட்டிலும் அதிக வெற்றி பெற்று நல்ல ரன் ரேட்டில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் அணி இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வியடைந்து ஏழாவது இடத்தில் நீடிக்கிறது.
இதையும் படிங்க: சாதாரண விருது போதாது.. ஆஸ்கார் குடுங்க.. என்ன மாதிரியான நடிப்பு – கவாஸ்கர் அதிரடி பேச்சு
இதில் முதல் வெற்றியை பெறவே போராடும் டெல்லி அணி இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து எட்டாவது இடத்திலும், கேஎல் ராகுல் தலைமையிலான புனே அணி ஒரு போட்டியில் விளையாடி அதில் தோல்வி அடைந்து தற்போது பத்தாவது இடத்திலும் இருக்கிறது.