எனக்கா ஆட்டநாயகன் விருது?.. எங்களை விட மும்பைக்குதான் ஈசியா இருந்தது – சாய் சுதர்சன் பேட்டி

0
714
Sai

இன்று ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் இதே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக எந்த இடத்தில் விட்டாரோ, அதே இடத்தில் இருந்து சாய் சுதர்சன் தொடர்ந்து இருக்கிறார்.

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. குஜராத் டைட்டன்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சகா 15 பந்தில் 19 ரன், கேப்டன் கில் 22 பந்தில் 31 ரன், கடைசிக் கட்டத்தில் ராகுல் திவாட்டியா 15 பந்தில் 22 ரன் எடுத்தார்கள். மூன்றாவது இடத்தில் வந்த சாய் சுதர்சன் ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்கேற்றார் போல் இன்னிங்சை நகர்த்தி 39 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். இதில் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடக்கம்.

- Advertisement -

இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த மும்பை இந்தியன்ஸ் அணி புதிய பந்தில் நன்றாக ஆரம்பித்தாலும் கூட, பந்து தேய்ந்த பின்னால் அவர்கள் ரன்கள் எடுக்க சிரமப்பட்டார்கள். இது வழக்கமான குஜராத் அகமதாபாத் ஆடுகளம் போல் இல்லாமல் வேகம் குறைவாக காணப்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா 29 பந்தில் 43 ரன்கள், டிவால்ட் பிரிவியஸ் 38 பந்தில் 46 ரன்கள் எடுத்தார்கள்.

இவர்களுக்குப் பின்னால் அதிரடி ஆட்டக்காரர்கள் டிம் டேவிட், திலக் வருமா, ஹர்திக் பாண்டியா போன்ற பேட்ஸ்மேன் இருந்தாலும் கூட ரன்கள் எடுப்பது சிரமமாக இருந்தது. மேலும் ரசித் கான் மற்றும் மோகித் சர்மா இருவரும் ஆடுகளத்திற்கு ஏற்ற வகையில் மிகச் சிறப்பாக பந்துவீசி நெருக்கடி கொடுத்தார்கள். பந்துக்குப் பந்து அதிரடியாக விளையாட முடியாத ஆடுகளமாக இருந்ததால், வெற்றிக்குத் தேவையான ரன் அழுத்தம் அதிகரித்தது.

இதன் காரணமாக கடைசி இரண்டு ஓவர்களில் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்ட பொழுது, 19ஆவது ஓவரை வீசிய பென்சர் ஜான்சன் எட்டு ரன்கள் தந்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார். இதற்கு அடுத்து இருபதாவது ஓவரை வீசிய உமேஷ் யாதவ் ஹர்திக் பாண்டியாவுக்கு முதல் இரண்டு பந்துகளில் பத்து ரன்கள் விட்டு தந்தார். ஆனாலும் அதற்கு அடுத்த இரண்டு பந்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் பியூஸ் சாவலா இருவரையும் வெளியேற்றி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தந்தார். இந்த தோல்வி மும்பை அணிக்கு பெரிய அதிர்ச்சியை கொடுப்பதாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டி முடிவுக்கு பின்னால் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்சன் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பேசும் பொழுது “இரண்டாவது இன்னிங்ஸில் மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்கள் பணிப்பொழிவில் விளையாடியதால் பேட்டிங் கொஞ்சம் எளிமையாக இருந்தது. ஆனால் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்வது இதை விட கடினமாக இருந்தது. ஆனால் இதைத் தாண்டி நாங்கள் ஒரு சிறந்த ஆட்டத்தை விளையாடியதாக நினைக்கிறோம். நான் இதை அழுத்தமாக எடுத்துக் கொள்ளவில்லை. என்னை வெளிப்படுத்துவதற்கும் எங்கள் அணியின் வெற்றிக்கு உதவுவதற்கும் ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்கிறேன்.

இதையும் படிங்க : எங்க திட்டமே இதுதான்.. கரெக்டா வந்து வலையில விழுந்தாங்க.. இது ரொம்ப ஸ்பெஷல் – சுப்மன் கில் பேட்டி

நான் சில பந்துகளை விளையாடியதுமே, இங்கு இந்த ஆடுகளத்தில் எல்லா பந்தையும் அடித்து விளையாட முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன். எனவே இங்கு இன்னிங்சை கட்டமைத்து விளையாட வேண்டும் என்று தீர்மானித்தேன். அதன்படியே செய்தேன். ஆனால் எங்கள் அணியில் பல வீரர்கள் வெற்றிக்கு பங்களிப்பு செய்திருப்பதால், என் பெயரை ஆட்டநாயகனாக தேர்ந்தெடுத்தது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. பந்துவீச்சில் வேகத்தை குறைப்பதுதான் எங்களுடைய திட்டமாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.