நடப்பு ஐபிஎல் தொடரின் 65வது போட்டியில் அசாம் மாநிலம் கவுகாத்தி மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் வென்றால் முதல் இரண்டு இடங்களில் ஏதாவது ஒரு இடத்தை உறுதி செய்ய முடியும் நிலையில் ராஜஸ்தான் அணி இருந்தது. அதே சமயத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்து விட்டது. இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆச்சரியப்படுத்தியது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜோஸ் பட்லர் இல்லாத நிலையில் ஓபனராக வந்த கோலர் -கேட்மோர் 18(23), ஜெய்ஸ்வால் 4(4), சஞ்சு சாம்சன் 18(15) என முக்கியம் ஒன்று விக்கெட்டுகள் வரிசையாக விழுந்தது. இந்த நேரத்தில் ரியான் பராக் மற்றும் அஸ்வின் ஜோடி சேர்ந்து 34 பந்துகளில் 50 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். அஸ்வின் 19 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதற்குப் பிறகு ராஜஸ்தான் அணியில் எந்த பேட்ஸ்மேன்களும் பெரிய அளவில் பங்களிப்பு செய்யவில்லை. கடைசி வரை தாக்குப் பிடித்த ரியான் பராக் மட்டும் போராடி 34 பந்தில் 48 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழந்து 144 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் தரப்பில் கேப்டன் சாம் கரன், ஹர்ஷல் படேல் மற்றும் ராகுல் சாஹர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்கள்.
இதற்கடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் சிங் 6(4), ஜானி பேர்ஸ்டோ 14(22), ஷஷாங்க் சிங் 0(2), ரைலி ரூசோவ் 22(13) ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். இதைத் தொடர்ந்து சாம் கரன் மற்றும் ஜிதேஷ் சர்மா இருவரும் 46 பந்தில் 63 உடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். ஜிதேஷ்சர்மா 20 பந்தில் 22 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிங்க : டி20 உ.கோ-ல் இந்திய அணியை ஆச்சரியப்படுத்துவோம்.. பாகிஸ்தான் நம்பிக்கை கொடுத்திருக்கு – அயர்லாந்து கேப்டன் பேட்டி
இந்த நிலையில் கடைசி 4 ஓவர்களுக்கு 33 ரன்கள் தேவைப்பட்டது. ஆட்டம் இழக்காமல் சாம் கரன் 63(41), அசுதோஸ் ஷர்மா 17(11) ரன்கள் எடுக்க, 18 புள்ளி ஐந்து ஓவரில் பஞ்சாப் ஐந்தாவது வெற்றி பெற்றது. இதன் மூலம் பஞ்சாப் ஒன்பதாவது இடத்திற்கு வர, மும்பை பத்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. மேலும் தற்பொழுது புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை சென்னை அல்லது ஹைதராபாத் அணியிடம் இழப்பதற்கான வாய்ப்பு ராஜஸ்தான் அணிக்கு உருவாகி இருக்கிறது. இதனால் இறுதி போட்டிக்கான தகுதிச் சுற்றில் விளையாட முடியாமல் போகலாம். அந்த அணி தொடர்ந்து நான்கு தோல்விகளை சந்திப்பது குறிப்பிடத்தக்கது.