இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்சு கோடக் ஆசியக் கோப்பை தொடரில் சஞ்சு சாம்சனுக்கு என்ன மாதிரியான ரோல் கொடுக்கப்பட்டிருக்கிறது? என்பது குறித்து பேசி இருக்கிறார்.
நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் போட்டியில் யுஏஇ அணிக்கு எதிராக திலக் வர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இருவருமே அணியில் இடம் பெற்று இருந்தார்கள். ஆனால் மூன்றாவது இடத்தில் சூரியகுமார் யாதவ் பேட்டிங் செய்ய வந்தார். எனவே சஞ்சு சாம்சனுக்கு பேட்டிங் வரிசையில் எந்த இடம் கொடுக்கப்படும்? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
சாம்சன் ரோல் இதுதான்
இது குறித்து இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சிதான்சு கோடக் பேசும் பொழுது “சஞ்சு பேட்டிங் வரிசையில் ஐந்து அல்லது ஆறாவது இடத்தில் அதிகம் பேட்டிங் செய்தது கிடையாது. ஆனால் அவரால் இந்த இடத்தில் பேட்டிங் செய்ய முடியாது என்று அர்த்தம் இல்லை. அவர் எந்த இடத்திலும் பேட்டிங் செய்ய திறமை கொண்டவர் என்று நான் நினைக்கிறேன். அணியின் தேவைகளை பொறுத்து தலைமை பயிற்சியாளரும் கேப்டனும் இதை முடிவு செய்வார்கள். சஞ்சு எந்த இடத்தில் பேட்டிங் செய்தாலும் மகிழ்ச்சி அடைவார்”
“எங்களுடைய பேட்டிங் வரிசையை பார்த்தால் யாரும் எந்த இடத்தில் விளையாடியும் போட்டியை முடிக்க முடியும். எங்களிடம் நான்கு ஐந்து ஆக்ரோஷமாக விளையாடக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள். சூழ்நிலையை பொறுத்து அவர்களை எங்கே அனுப்புவது என கேப்டன் மற்றும் பயிற்சியாளர் முடிவு செய்வார்”
எங்களுக்கு வெறுப்பு இல்லை
“ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பதை பார்த்து அதற்கு ஏற்றபடி அணி தேர்வு செய்யப்படுகிறது. நாங்கள் முதலில் ஆடுகளம் குறித்து கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் பேசுவோம். எங்களால் 11 பேரை மட்டுமே விளையாட வைக்க முடியும். எதிரணியை பார்த்து பிறகு சரியான அணியை இறக்கி விளையாட வைப்போம்”
இதையும் படிங்க : திரும்ப திரும்ப சொல்றேன்.. இத செஞ்சா இந்தியாவை சும்மா தோற்கடிப்போம் – பாக் கேப்டன் சல்மான் பேச்சு
“அர்ஸ்தீப் விளையாடாதது ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஆனால் நாங்கள் கண்டிஷனை பொறுத்து அணியை தேர்வு செய்கிறோம். ஆனால் தனிப்பட்ட முறையில் அவர் விளையாட முடியாமல் போய்விட்டதாக நினைப்பார். ஆனால் எங்களுக்கு யார் மீதும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு கிடையாது. நாங்கள் தேவைகளை பொறுத்து தான் எல்லாவற்றையும் செய்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.






