இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 மேட்ச் முடிவடைந்த நிலையில், பேட்டர்களுக்கும் பௌலர்களுக்கும் இடையிலான சமநிலையை மீண்டும் கொண்டு வர இந்தியாவில் எஸ்ஜி ஒயிட் பால்களைப் பயன்படுத்தலாம் என்று முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு முக்கியமான பரிந்துரையை வழங்கியுள்ளார்.
தற்போது சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் அதிக ரன்கள் குவிக்கும் மேட்ச்கள் அதிகரித்து வரும் நிலையில், கூக்கபுர்ரா பால்களுக்குப் பதிலாக எஸ்ஜி ஒயிட் பால்களுக்கு மாறலாம் என்று அஸ்வின் ஆலோசனை தெரிவித்துள்ளார். எஸ்ஜி பால்களில் தடிப்பான சீம் இருப்பதால், அது பேட்டர்களுக்கு சவாலாக அமைந்து பௌலர்களுக்கு மேட்ச்சில் நல்ல அட்வாண்டேஜ் கொடுக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்போது “இங்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையே மெல்லிய சீம் கொண்ட இந்த பால் தான். நான் மீண்டும் சொல்கிறேன், நமது எஸ்ஜி ஒயிட் பால் பேட்டர்களுக்கு காரியங்களை மிகவும் கடினமாக்கும். அதில் தடிப்பான சீம் உள்ளது, மேலும் வெவ்வேறு ஸ்பீட்களில் பால் வெவ்வேறு விதமாக பிஹேவ் செய்யும். அதனால் இந்தியாவில் எஸ்ஜி ஒயிட் பாலைப் பயன்படுத்தும் நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். பெரிய ஸ்கோர்களை அடிக்க எஸ்ஜி ஒயிட் பால் சாதகமாக இருக்காது, அது பேட்டர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். கண்டிஷன்ஸிலிருந்து பௌலர்களுக்கும் ஏதாவது பலன் கிடைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
அதன் பிறகு அவர் மேலும் கூறும்போது “டியூ உடன் சேர்த்து இந்த பாலும் ஒரு முக்கிய காரணம் என்பதால் இதை மாற்றுவது குறித்து நாம் யோசிக்க வேண்டும். டியூ இல்லாத ஆஸ்திரேலியா போன்ற இடங்களுக்கு கூக்கபுர்ரா பால் செட் ஆகும், ஆனால் டியூ அதிகம் இருக்கும் இந்தியாவில் ஏன் வேறு பாலை யோசிக்கக்கூடாது?” என்று குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக அவர் பேசும்போது “டி20 கிரிக்கெட் என்பது என்டர்டெயின்மென்ட் சார்ந்த விஷயம் தான், மக்கள் அதிக ஸ்கோர்களைப் பார்க்க விரும்புகிறார்கள். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக ஐபிஎல் தொடர்களில் 260 அல்லது 270 ரன்களைக் கூட டீம்கள் சேஸ் செய்வதைப் பார்க்கிறோம். அது சரியாக இருக்காது, 180 அல்லது 190 ரன்கள் அடிப்பது தான் நல்ல போட்டியாக இருக்கும். எப்போதாவது 200 அல்லது 220 ரன்கள் வருவது பரவாயில்லை, ஆனால் பௌலர்களுக்கும் சாதகமாக ஏதேனும் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறி இருக்கிறார்.






