மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் பந்தை சரியான லென்த்தில் வீசாமல் அனைத்து இடங்களிலும் வீசியதாக இந்திய முன்னாள் வீரர் சாஹல் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
இதுகுறித்து சாஹல் பேசும்போது “அவர்கள் சற்று டிஃபென்சிவ் ஆக மாறிவிட்டதாக உணர்ந்தேன். நாம் அனைத்து இடங்களிலும் பந்துவீசினோம். ஃபுல்லராகவும் பந்துவீசினோம், லென்த்தையும் மிஸ் செய்தோம். நாம் குட் லென்த்தில் பந்துவீசிய போதெல்லாம் அவர்களின் ஸ்டிரைக் ரேட் 100-க்கு மேல் கூட இல்லை. எதிரணி 250 ரன்களை சேஸ் செய்து உங்கள் மீது அதிக பிரஷர் போடும்போது பந்துவீச்சாளர்களும் நர்வஸ் ஆகிவிடுகிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் அவர் பேசும்போது “அவர்களுக்கு எளிதாக பவுண்டரிகள் கொடுக்கக் கூடாது என்று நினைத்ததால் எக்ஸிகியூஷனில் சிறிய வித்தியாசம் ஏற்பட்டது. அவர்கள் கண்டிப்பாக அந்த லென்த்தில் பந்துவீச முயன்றார்கள், ஆனால் அது அவர்களுக்கான நாளாக அமையவில்லை. கொஞ்சம் பனிப்பொழிவு இருந்தது, அது பந்துவீச்சாளர்களுக்கு சிரமத்தை தந்தது. ஆனால் போர்டில் 250 ரன்கள் இருக்கும்போது உங்களால் அட்ஜஸ்ட் செய்ய முடியும்” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து சாஹல் பேசுகையில் “பனிப்பொழிவு இருக்கும்போது ஸ்பின்னர்களுக்கு சற்று கடினம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நீங்கள் டிஃபென்சிவ் ஆகிவிட்டீர்கள், அவர்களை அவுட் செய்ய முயற்சி செய்யவில்லை. உங்களிடம் ரன்கள் அதிகம் இருந்தது, ஆரம்பத்திலேயே உங்களுக்கு ஒரு விக்கெட் தேவைப்பட்டது. நீங்களாக டிஃபென்சிவ் ஆக இருந்தபோதிலும் ரன்கள் சென்றுகொண்டுதான் இருந்தன” என்று கூறி இருக்கிறார்.
இறுதியாக அவர் கூறும்போது “பேட்டர்களை அவுட் செய்யும் மைண்ட்செட் இருக்கும்போது, இரண்டு சிக்ஸர்கள் வாங்கிய பிறகும் அவர்களை அவுட் செய்திருக்கலாம். ஆனால் நீங்கள் அவர்களை அவுட் செய்ய முயற்சிப்பது போல் தெரியவே இல்லை. கட் ஷாட் ஆடுவதற்காக மூன்று ஃபீல்டர்களை நிறுத்தியிருந்தீர்கள். பேட்டர்கள் தவறு செய்வார்கள் என்று காத்திருந்தீர்கள், ஆனால் அவர்கள் தவறு செய்யவில்லை” என்று கூறி இருக்கிறார்.






