17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 55 ஆட்டங்கள் முடிந்துள்ளது. இதில் முன்னணி அணிகளில் ஒன்றாக கருதப்படும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த சீசன் சோகமாகவே அமைந்துள்ளது. முதல் அணியாக நடப்பு ஐபிஎல் சீசனில் ப்ளே ஆஃப் வாய்ப்பை விட்டு மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறி இருந்தது.
மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் நான்கு போட்டிகளில் வெற்றியும், எட்டு போட்டிகளில் தோல்வியும் தழுவி புள்ளி பட்டியலில் தற்போது ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தொடர் தோல்விகள்தான் பாடத்தை கற்றுக் கொடுக்கும் எனவும், சில விஷயங்களை மகேந்திர சிங் தோனியால் கூட கற்றுத் தர முடியாது எனவும் கூறி இருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த மூன்று சீசன்களாக கோப்பை எதுவும் வெல்லாத நிலையில் புதிய மாற்றத்தினை வேண்டி குஜராத் அணியில் இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ட்ரேடிங் முறையில் மாற்றம் செய்து அவரையே கேப்டனாக நியமித்தது. மேலும் 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு கொண்டிருந்த ரோகித் சர்மாவின் கேப்டன்சி வாழ்க்கையும் அதோடு முடிவுக்கு வந்தது.
ஆனால் இந்த சீசனை மும்பை இந்தியன்ஸ் அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்திருக்கிறது. மேலும் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன் மாற்றம் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மேலும் மும்பை அணி எங்கு சென்று விளையாடினாலும், ரசிகர்கள் பாண்டியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வந்தனர். இதனால் மனரீதியாக பாதிப்படைந்த ஹர்திக் பாண்டியா கேப்டன்சியிலும், அணி வீரராகவும் தொடர்ந்து தவறுகளை செய்து வந்தார்.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் தோல்விகள் குறித்து ஹர்திக் பாண்டியா சில விஷயங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார் அதில் அவர் கூறும் பொழுது “என்னை பொறுத்தவரை, ஒரு அணியில் யார் பொறுப்பை உணர்ந்து ஆடுகிறார்களோ அவர்களே தனிப்பட்ட முறையில் மிகவும் பொறுப்புடையவர்களாக இருப்பார்கள். என்னை பொருத்தவரை தோல்விகளின் மூலம் நான் என்ன தவறு செய்தோம் என்பதையும், அந்த தோல்வியிலிருந்து பாடத்தை கற்றுக் கொள்ளவும் முடியும்.
இதையும் படிங்க: உண்மை இதுதான்.. கோலி ரோகித் இந்த பேட்ஸ்மேன் முன்னாடி ஒன்னுமே கிடையாது – ஹர்பஜன் சிங் பேட்டி
இந்த அனுபவத்தை வேறு யாராலும் உங்களுக்கு சொல்லிக் கொடுக்க முடியாது. உங்க நெருங்கிய உறவினரோ, அல்லது சக நண்பரோ, ஏன் தற்போது ரோல் மாடலாக இருக்கும் மகேந்திர சிங் தோனியாலும் கூட இதை சொல்லித் தர முடியாது. மேலும் நிறைய கேள்விகளுக்கு பதில் சொல்ல நேரம் எடுக்கும். இப்போது அது குறித்து எதுவும் வெளிப்படையாக சொல்ல முடியாது” என்று கூறியிருக்கிறார். ஹர்திக் பாண்டியாவின் இந்த கருத்துக்கு சில ரசிகர்களும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்