பந்து தயாரிக்கிற கம்பெனியை மாத்துங்க.. இவங்கள கொண்டு வாங்க ஐபிஎல் செம்மையா இருக்கும் – கம்பீர் யோசனை

0
212
Gambhir

நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சொந்த மைதானத்தில் 223 ரன்கள் குவித்த போதும், அதிர்ச்சி அடையும் வகையில் தோல்வி அடைந்தது. திருப்பி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜோஸ் பட்லர் அதிரடியாக 60 பந்துகளில் 107 ரன்கள் எடுக்க, அந்த அணி வெற்றி பெற்றது. தற்பொழுது ஐபிஎல் தொடர் பேட்ஸ்மேன்களின் சொர்க்கமாக இருந்து வருகின்ற காரணத்தினால், இதுகுறித்து கம்பீர் தனது வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்.

தற்பொழுது இந்தியாவில் கூக்கபுரா பந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பந்தில் முதல் இரண்டு ஓவர்களிலேயே ஸ்விங் நின்று விடுகிறது. மேலும் பேட்ஸ்மேன்கள் அடிப்பதற்கு ஏதுவாக பந்து ஆடுகளத்தில் நேராக வருகிறது. பந்தில் எந்தவித மாற்றமும் இருப்பதில்லை.

- Advertisement -

இதன் காரணமாக பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்குகிறார்கள். முதல் பேட்டிங் செய்து 200 ரன்கள் எடுத்தாலும் கூட, அடுத்து விளையாடும் அணி சாதாரணமாக 200 ரன்கள் எடுக்கிறது. மேலும் இரண்டாம் பகுதி பந்துவீச்சின் போது பனிப்பொழிவு வந்தால், பேட்ஸ்மேன்களுக்கு இன்னும் சாதகமாகி விடுகிறது.

இப்படி ஐபிஎல் தொடர் ஒரு தலைப்பட்சமாக சென்று கொண்டிருக்கின்ற காரணத்தினால், தற்பொழுது பயன்படுத்தப்பட்டு வரும் கூக்காபுரா பந்துகளை விட்டுவிட்டு, காற்றில் அசையக்கூடிய, நீண்ட நேரம் ஸ்விங் இருக்கக்கூடிய டியூக் வகை பந்துகளை பயன்படுத்துவது சரியான தீர்வாக இருக்கும் என்று கம்பீர் பேசி இருக்கிறார்.

இதுகுறித்து கம்பீர் கூறும் பொழுது ” 50 ஓவர்களுக்கு தாக்குப் பிடிக்கும் பந்தை ஒரு நிறுவனத்தால் தயாரிக்க முடியாது என்றால், அந்த நிறுவனத்தை நாம் மாற்றி விடலாம். அந்த நிறுவனத்தின் பந்துகளை நாம் வாங்க தேவையில்லை. இந்தியாவில் கூக்கபுரா பந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது?

- Advertisement -

இதையும் படிங்க : இதே கோலியா இருந்தா 2 மாசம் புகழ்ந்து இருப்பிங்க.. பட்லர் யாரோதான – ஹர்பஜன் சிங் விமர்சனம்

இதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். நமக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் நல்ல சமநிலை தேவையாக இருக்கிறது. எனவே ஆடுகளங்கள் பந்துவீச்சுக்கு சாதகமாக இல்லை என்றாலும் கூட, பந்து காற்றில் அசைந்து நகரக் கூடிய வகையில் இருக்க வேண்டும். இதற்கு டியூக் வகைப்பந்து மிகவும் சரியான ஒன்று. இந்தப் பந்தில் பேட்ஸ்மேன்கள் நேராக லைனை பிடித்து சுலபமாக அடிக்க முடியாது. பந்து காற்றில் அசைவதால் பேட்ஸ்மேன்களுக்கு கொஞ்சம் சவால் இருக்கும். மேலும் இது பற்றி நிபுணர்களின் கருத்தையும் கேட்க விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.