ஜெயிச்ச பெண்கள் ஆர்சிபி.. ஆண்கள் அணிக்கு செய்தி அனுப்பிய விஜய் மல்லையா

0
2065

மகளிர் டி20 பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, டெல்லி அணியை வீழ்த்தி முதன் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கும் ஆர்சிபி அணிக்கு முன்னாள் உரிமையாளரான விஜய் மல்லையா பாராட்டுத் தெரிவித்துள்ளார். மேலும் ஆண்கள் ஆர்சிபி அணிக்கும் ஒரு தெளிவான செய்தியைக் கூறியிருக்கிறார்.

மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் தற்போது வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த சீசனில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெறும் நிலையில், முதல் இடத்தைப் பிடித்த டெல்லி அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

இரண்டாவது மற்றும் மூன்றாவது அணிகளான மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் மோதியது. இதில் பெங்களூர் அணி மும்பை அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று 16 ஆண்டு கால ஏக்கத்தைத் தணிக்கும் வகையில் பெங்களூர் அணி டெல்லி அணியை எதிர்த்து விளையாடியது.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி பெங்களூர் அணியின் சுழற் பந்துவீச்சினை தாக்குப் பிடிக்க முடியாமல் 113 ரன்களுக்கு அனைத்து விக்கெடுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. ஒரு கட்டத்தில் ஆறு ஓவர்களில் 61 ரன்கள் என்று இருந்த டெல்லி அணியை பெங்களூர் அணியின் சுழற்ப்பந்து வீச்சாளர்கள் மிக அற்புதமாக பந்துவீசிக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அந்த அணியின் சுழற் பந்துவீச்சாளர் ஸ்ரேயன்கா பாட்டில் மிக அற்புதமாக பந்துவீசி 3.3 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூர் அணி 19.3 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் குவித்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

- Advertisement -

இதன்மூலம் 16 வருடங்களாக ஆண்கள் அணி செய்ய முடியாத சாதனையை பெண்கள் அணி சாதித்து சாம்பியன் பட்டத்தை வென்று நிரூபித்துக் காட்டி இருக்கிறது. தற்போது பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கும் ஆர்சிபி அணிக்கு அந்த அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா வாழ்த்து தெரிவித்தும், ஆண்கள் ஆர்சிபி அணிக்கு ஒரு செய்தியையும் கூறி இருக்கிறார்.

ஆண்கள் ஆர்சிபி அணிக்கு செய்தி

“சாம்பியன் பட்டம் வென்ற பெண்கள் ஆர்சிபி அணிக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட கால தாமதத்திற்கு இடையில் கோப்பையை வெல்லாத ஆண்கள் ஆர்சிபி அணியும் இம்முறை கோப்பையை வென்றால் இரட்டை மகிழ்ச்சியாக இருக்கும். எனவே ஆண்கள் ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல எனது வாழ்த்துக்கள்” என்று கூறி இருக்கிறார். இதன் மூலம் வர இருக்கும் ஆண்கள் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்கு சற்று அழுத்தம் அதிகரிக்கும்.

இதையும் படிங்க: 10 விருதுகள்.. WPL தொடரின் முழு பரிசு தொகை விபரம்.. ஆர்சிபி-க்கு எத்தனை கோடி?

எனவே இவற்றையெல்லாம் கடந்து ஆண்கள் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். மேலும் பெண்கள் அணியில் அதிக ரன் குவித்தவர் ஆன ஆர்சிபியின் எல்லிஸ் பெர்ரி ஆரஞ்சு தொப்பியைக் கைப்பற்றினார். இவர் இந்த சீசனில் 347 ரன்களும், பந்துவீச்சில் ஏழு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.