இன்று நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சிஎஸ்கே அணிக்கு எதிராக தனது மூன்றாவது ஆட்டத்தில் முதல் வெற்றியை பெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த நிலையில், இன்று வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில், பலம் வாய்ந்த சிஎஸ்கே அணியை வீழ்த்தி வெற்றி பெற்று ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு ஓபனர்ஸ் டேவிட் வார்னர் 52, பிரித்திவிஷா 43 ரன்கள் என முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வலிமையான துவக்கத்தை தந்தார்கள். அடுத்து கேப்டன் ரிஷப்மென்ட் 31 பந்தில் அதிரடியாக 51 ரன் எடுத்தார். 20 ஓவரில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன் குவித்து அசத்தியது. மதிஷா பத்திரனா மூன்று விக்கெட் வீழ்த்தினார்
இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணிக்கு பவர் பிளேவில் பெரிய பின்னடைவு உண்டானது. அந்த அணி கேப்டன் ருதுராஜ் மற்றும் ரச்சின் ரவீந்திராவை சொற்ப ரன்களில் இழந்தது. ஒரு பக்கம் ரகானே 45 ரன்கள், டேரில் மிட்சல் 32 ரன்கள், கடைசி கட்டத்தில் தோனி அதிரடியாக 16 பந்தில் 37 ரன்கள் எனப் போராடினாலும் வெற்றிக்கு அது போகவில்லை.
20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் மட்டுமே எடுக்க, டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றி பெற்றது. அந்த அணியில் கலில் அகமது இரண்டு, முகேஷ் குமார் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்யும் பொழுது ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு மிக சாதகமாக மாறி இருந்தது பின்னடைவாக அமைந்துவிட்டது.
வெற்றிக்குப் பின் பேசிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் “எங்களுடைய பந்துவீச்சாளர்கள் இன்று மிகவும் சரியாக இருந்தார்கள். நாங்கள் செய்த தவறுகளில் இருந்து கற்றுக் கொள்வதை பற்றி நிறைய பேசினோம். பிரித்திவிஷா கடினமாக உழைக்கிறார். அவருக்கு வாய்ப்பு தருவதற்கான நேரம் குறித்து நாங்கள் சிந்தித்து இருந்தோம். இன்று வாய்ப்பு பெற்ற அவர் மிகச் சரியாக அதை பயன்படுத்திக் கொண்டார். முகேஷ் குமார் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் அபாரமாக செயல்படுகிறார்.
இதையும் படிங்க : எனக்கு இந்த விஷயம் சந்தோசமா இருக்கு.. ரச்சின் தடுமாறியது இதனால்தான் – சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேட்டி
நான் அதிக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த காரணத்தினால் இன்றைய போட்டியில் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்வது என முடிவு செய்தேன். என்னால் போட்டியை மாற்ற முடியும் என்று நம்பினேன். ஒன்றரைவருடங்களாக இதற்காக காத்திருந்தேன். இந்த விஷயங்கள் எல்லாம் சேர்ந்துதான் என்னை கட்டி எழுப்பியது. நான் இன்னும் கிரிக்கெட் வீரராக கற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.