நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே நடந்தது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டனாக ருதுராஜ் களம் வந்தார். டாஸ் தோற்ற சிஎஸ்கே அணி இரண்டாவதாக பேட்டிங் செய்து 176 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றது.
இதற்கடுத்து இரண்டாவது போட்டியையும் சிஎஸ்கே அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியிலும் சிஎஸ்கே அணி டாஸ் தோற்றது. இந்த முறை முதலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்கள் சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரிய பேட்டிங் விருந்தை வைத்தார்கள்.
ரச்சின் ரவீந்தரா 20 பந்தில் 46 ரன்கள், கேப்டன் ருதுராஜ் 36 பந்தில் 46 ரன்கள், சிவம் துபே 22 பந்தில் 51 ரன்கள், இளம் வீரர் சமீர் ரிஸ்வி 6 பந்தில் 14 ரன்கள் என, நேற்று மட்டும் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் ஸ்ட்ரைக் ரேட் 200க்கும் மேல் அதிரடியாக விளையாடி, சிஎஸ்கே அணியை 20 ஓவர்கள் முடிவில் 206 ரன்கள் என்கின்ற பெரிய மொத்தத்தை எடுக்க வைத்தார்கள்.
தற்போது சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையில் தோனி எட்டாவது இடத்தில்தான் களம் இறங்குவார் என்பது நேற்று உறுதியாகி இருக்கிறது. ஏனென்றால் கடைசிக் கட்ட ஓவர்கள் வந்த பொழுதும் கூட, அவர்பேட்டிங் செய்ய வரவில்லை. ஒருவேளை ரஷீத் கான் 19வது ஓவரில் இருந்ததால், இந்த முடிவை எடுத்தார்களா என்பது தெரியவில்லை. தோனி தற்பொழுது முழுக்க முழுக்க கடைசி இரண்டு மூன்று ஓவர்களில் வரும் வேகப்பந்து வீச்சை அடிப்பதற்கான பயிற்சியை செய்து இருக்கிறார்.
இந்த நிலையில் 19ஆவது ஓவரை ரஷீத் கான் வீச, சிவம் துபே சந்திப்பதற்கு தயாராக இருந்தார். இந்த நேரத்தில் பெவிலியனில் உள்ளே இருந்த கேப்டன் ருதுராஜ், அடுத்து பேட்டிங் செய்ய செல்வதற்கு தயாராக இருந்த ரவீந்திர ஜடேஜாவை நிறுத்தி, சிவம் துபே அவுட் ஆனால் சமீர் ரிஸ்வி செல்ல வேண்டும் என திட்டத்தை மாற்றினார். இந்த நிலையில் ரஷித் கானின் முதல் பந்திலேயே சிவம் துபே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இதையும் படிங்க : சிஎஸ்கே போட்டியில் கில்லுக்கு அபராதம்.. இனிமே நடந்தால் போட்டியில் விளையாடவும் தடை
இதற்கு அடுத்து ருதுராஜ் மாற்றி அனுப்பிய அறிமுக வீரர் சமீர் ரிஸ்வி உள்ளே வந்து ரஷீத் கானின் முதல் பந்தையை சிக்ஸருக்கு பறக்க விட்டார். அதே ஓவரில் இன்னொரு சிக்ஸரையும் அடித்து, 6 பந்துகளில் அதிரடியாக 14 ரன்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் கேப்டன் ருதுராஜ் செய்த மாற்றத்தால் சிஎஸ்கே அணிக்கு ரன்னும் வந்தது, அதே சமயத்தில் சமீர் ரிஸ்விக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அவருடைய பேட்டிங் அணுகுமுறை எப்படி களத்தில் இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியவும் வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இது தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.