என்ன அழகு.. தோனிக்கு தோற்றாலும் அது எவ்வளவு முக்கியம்னு தெரியும் – சிஎஸ்கே கோச் பிளமிங் பேட்டி

0
4303
Stephen Fleming and Dhoni

நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் சென்னை, டெல்லி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தாலும் மகேந்திர சிங் தோனியின் அதிரடி ஆட்டம் சில காரணங்களால் எங்களுக்கு பாசிட்டிவ் எண்ணத்தைக் கொடுத்தது என்று பயிற்சியாளர் பிளம்மிங் தெரிவித்திருக்கிறார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 51 ரன்கள் குவித்தார். தொடக்கத்தில் சிறப்பாக பந்து வீசிய சென்னை அணி இறுதிக்கட்டத்தில் சொதப்பியதால் டெல்லி அணி 20 ஓவர்களில் 191 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பந்து வீச்சில் சொதப்பிய சென்னை அணி பேட்டிங்கில் கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பேட்டிங் தொடங்கிய சென்னை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி அளிக்கும் வகையில் இரு முன்னணி அதிரடி தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டம் இழந்தனர். இதற்குப் பிறகு அனுபவ வீரர் ரகானே மற்றும் ஆல்ரவுண்டர் டைரி மிச்சல் ஆகியோர் மட்டுமே அணியை கரை சேர்த்த முயற்சி செய்து கொண்டிருக்க, இறுதியில் டைரி மிச்சல் 34 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

அவர் வெளியேறிய சிறிது மணித்துளிகளில் ரகானேவும் 45 ரன்கள் குவித்து வெளியேற, அதற்குப் பிறகு அடுத்தடுத்து இரு விக்கெட்டுகளை விரைவாக இழந்ததால் சென்னை அணி குறைந்த ரன்களிலேயே ஆல் அவுட் ஆகிவிடும் என்ற நிலையில் இருந்தது. ஆனால் அதற்குப் பின்னர் சென்னை அணிக்கு மகேந்திர சிங் தோனி களம் இறங்கி 231ஸ்ட்ரைக்ரேட்டில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் 16 பந்துகளில் நான்கு பவுண்டரி, மூன்று சிக்ஸர் என 37 ரன்கள் குவித்து வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றார்.

ஸ்டீபன் பிளமிங் பேட்டி

இருப்பினும் இறுதிக்கட்டத்தில் டெல்லி அணி சிறப்பாக பந்து வீசியதால் இருபது ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி அடைந்தது. எனவே இந்த போட்டி குறித்து கூறிய சென்னை அணியின் பயிற்சியாளர் பிளம்மிங் “இன்றைய போட்டியில் மகேந்திர சிங் தோனியின் ஆட்டம் சிறப்பாக உள்ளது. அவர் முழங்கால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு தற்போது நல்ல உடல் தகுதியில் இருக்கிறார்.

- Advertisement -

அவர் ஒற்றை கையில் அடித்த சிக்சர் எவ்வளவு அற்புதமாக, அழகாக இருந்தது. இந்தப் போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்தாலும் மகேந்திர சிங் தோனியின் அதிரடி ஆட்டம் எங்களுக்கு பாசிட்டிவ் எண்ணங்களைக் கொடுத்தது. ஏனெனில் தோனி சென்னை அணியின் நெட் ரன் ரேட்டை மனதில் வைத்து விளையாடினார். தோல்வியே அடைந்தாலும் குறைந்த ரன்களில் தோல்வி அடைவது மிகவும் முக்கியம். அது தோனிக்கு நன்றாக தெரியும். அதனால்தான் அவர் தோல்வியை பற்றி மனதில் கொள்ளாமல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: தோல்விக்கு பின் தோனிக்கு விருது.. சாக்‌ஷி தோனி வெளியிட்ட பதிவு.. சிஎஸ்கே ரசிகர்களையே மிஞ்சிட்டாங்க

பயிற்சியாளர் பிளம்மிங் கூறியதைப் போல சென்னை அணி குறைந்த ரன்களில் தோற்றது நல்ல விஷயம்தான். அப்போதுதான் பின்னர் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது. தற்போது ஒரு தோல்வியை பெற்றுள்ள சென்னை அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி முதல் இடத்தில் இடிக்கிறது.