சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக மோத இருக்கிறது. இந்த போட்டி வருகின்ற மார்ச் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்க இருக்கிறது.
கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இறுதிப் போட்டியோடு அணியின் முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு ஓய்வு பெற்றார். அவருடைய இடத்தை நிரப்புவதற்காக மட்டுமே மினி ஏலத்திற்கு இந்த முறை சிஎஸ்கே வந்தது. அவருடைய இடத்துக்கு 14 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டு வீரர் டேரில் மிட்சல், 8.40 கோடி ரூபாய்க்கு இருபது வயதான இந்திய அன்-கேப்டு வீரர் சமீர் ரிஸ்வி என இருவரை வாங்கியது.
மேலும் தற்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு துவக்க இடத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த நியூசிலாந்தின் துவக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே காயமடைந்திருக்கிறார். இவர் இரண்டாவது பாதி ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் கூட சிஎஸ்கே அணிக்கு கிடைப்பது கடினம்தான்.
எல்லா இடத்துக்கும் பிளேயர்ஸ் இருக்காங்க
எனவே இவர்கள் இருவரது இடம் குறித்து பேசி உள்ள சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸி “அம்பதி ராயுடு இடத்தில் நிச்சயமாக சமீர் ரிஸ்வி விளையாட முடியும் என்று நான் நம்புகிறேன். அம்பதி ராயுடு நீண்ட காலம் விளையாடி நல்ல அனுபவம் உள்ளவர். ஆனால் சமீர் இப்பொழுதுதான் துவங்குகிறார். எனவே உடனடியாக அவரிடம் அம்பதி ராயுடு போல எதிர்பார்க்க முடியாது. ஆனால் நாம் வளர்க்கத் தொடங்கலாம். மேலும் இயற்கையாக நல்ல பேட்டிங் திறமை இருக்கிறது.
சமீர் ரிஸ்வி சிஎஸ்கே பேட்டிங் ஆர்டரில் மிடில் ஆர்டரில் எங்காவது இருப்பார். அவர் இயல்பாகப் பந்தை அடித்து ஆடக் கூடியவராக இருக்கிறார். நான் நேற்று முதல் முறையாக வலை பயிற்சியில் பார்த்தேன்.அவர் திறமையான வீரராக தெரிகிறார். எனவே அவரை உருவாக்க தனிப்பட்ட முறையில் அவருடன் வேலை செய்ய நான் விரும்புகிறேன். அவரது பேட்டிங்கை மேம்படுத்த விரும்புகிறேன். அவர் ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாட வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம்.
இதையும் படிங்க : 18 பந்து 20 ரன்.. 18வது ஓவரில் ஆரம்பித்த மேஜிக்.. பைனலுக்கு மும்பை இந்தியன்சை வீழ்த்தி ஆர்சிபி தகுதி
கான்வே பாணியில் விளையாட ரவீந்த்ரா வருகிறார். வேறு விருப்பங்கள் கூட எங்களிடம் இருக்கிறது. ரகானே கூட கடந்த வருடம் மிகச் சிறப்பாக விளையாடினார். ரவீந்தராவை கடந்த உலக கோப்பையில் பார்த்தேன், அவரிடம் நல்ல நுட்பம் இருக்கிறது. அவர் விளையாடிய விதம் என்னைக் கவர்ந்தது. எனவே நான் இவருடனும் சேர்ந்து பேட்டிங்கில் வேலை செய்ய விரும்புகிறேன். இந்த நேரத்தில் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் எப்படி செல்ல நினைக்கிறார்கள்? என்று தெரியவில்லை. ஆனால் நான் சொன்னது போல எங்களிடம் எல்லாவற்றுக்கும் சரியான மாற்று வீரர்கள் இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.