2011 ஆம் ஆண்டு இந்திய அணி இந்தியாவில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை மகேந்திர சிங் தோனி தலைமையில் கைப்பற்றியது. அப்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் கேரி கிரிஸ்டன் இருந்தார்.
அவர் தன்னுடைய பயிற்சியாளர் பொறுப்பில் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கான அணியை உருவாக்குவதிலும், போட்டிகளுக்கான திட்டங்களை இணைந்து தயாரிப்பதிலும், மேலும் வீரர்களை ஒருங்கிணைப்பதிலும் மிகச்சிறந்தவராக இருந்தார். இந்தியா அந்த உலகக் கோப்பையை வென்றதில் பயிற்சியாளராக அவருடைய பங்கும் நல்ல முறையில் இருந்தது.
தற்போது அவர் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு புதிதாக வந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார். மேலும் ஐபிஎல் தொடரும் பயிற்சியாளராக அவருக்கு வெற்றிகரமாகவே இருக்கிறது. முதல் ஆண்டில் பட்டத்தை வென்ற அவர்கள் இரண்டாவது ஆண்டில் இரண்டாவது இடத்தை பிடித்தார்கள்.
புதிய கேப்டனுக்கு உண்டான நெருக்கடி
இந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த ஆண்டு தங்கள் கேப்டன் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்று விட்டதால், புதிய கேப்டன் இளம் வீரர் சுப்மன் கில் தலைமையில் விளையாட இருக்கிறது. மேலும் ஒரு பின்னடைவாக வேகப்பந்து வீச்சில் மிகப்பெரிய தாக்கத்தை அணிக்கு ஏற்படுத்திய முகமது சமியை இழந்திருக்கிறது.
இதன் காரணமாக புதிய கேப்டனாக பொறுப்பேற்று இருக்கும் கில்லுக்கு பெரிய நெருக்கடிகள் உருவாகி இருக்கிறது. ஐபிஎல் தொடரில் அவர் முதன்முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்கும் பொழுது முக்கிய வீரர்கள் இல்லாமல் விளையாடவேண்டிய சூழ்நிலை அமைந்திருக்கிறது. ஆனால் கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழி நடத்துவதில் அவர் ஆர்வமாக இருந்து வருகிறார்.
இதுகுறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் கூறும் பொழுது “கேப்டன் பொறுப்பு அவருடைய விளையாட்டுக்கு ஒரு முக்கிய பங்காற்றும் என நான் நினைக்கிறேன். அவர் கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்த ஆர்வமாக இருக்கிறார் என்பதை நான் அறிவேன். பயிற்சியாளராகிய நான் மற்ற வீரர்களிடமிருந்து சிறந்ததை பெற்று கேப்டனான கில்லுக்கு உதவி செய்ய வேண்டும். மேலும் அணியில் முன்னணியில் இருக்கும் அவர் சரியான முறையில் அணியை வழிநடத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.
இதையும் படிங்க : சப்போர்ட் பண்றிங்க சந்தோசம்.. ஆனா ப்ளீஸ் இத மட்டும் செய்யாதிங்க – ரசிகர்களுக்கு இஷான் கிஷான் கோரிக்கை
கில் ஒரு தரமான வீரர் மற்றும் நல்ல மனிதர். ஒரு தனிப்பட்ட வீரராக அவருக்கு நல்ல மோட்டிவேஷன் மற்றும் மன உறுதி இருக்கிறது. இதை அவர் இந்தியாவுக்கு விளையாடும் பொழுது நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் எந்த ஒரு புதிய கேப்டனும் தொடங்குவது போல அவரும் புதிதாக தொடங்குகிறார். இந்த வழியில் அவர் பல சவால்களை சந்திக்க இருக்கிறார். எனவே பயிற்சியாளரான நான் கண்டிப்பாக அவருக்கு உதவ வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.