நடப்பு ஐபிஎல் சீசனில் பாட் கம்மின்ஸ் தலைமையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிரடியான பேட்டிங் அணுகுமுறையுடன் விளையாடி அசத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக 134 ரன்களுக்கு சுருண்டு அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதுகுறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசியிருக்கிறார்.
இந்த ஐபிஎல் சீசனில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் அதிரடியான துவக்கத்தை கொடுத்து வருகிறார்கள். மேலும் மிடில் வரிசையில் எய்டன் மார்க்ரம் மற்றும் ஹென்றி கிளாசன் இருவரும் இருக்கின்ற காரணத்தினால், போட்டியை மிகப்பெரிய அளவில் முடிக்கிறார்கள்.
இதன் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் மட்டும் 260 ரன்கள் மூன்று முறை இந்த அணி அடித்திருக்கிறது. மேலும் பெங்களூரு அணிக்கு எதிராக 287 ரன்கள் குவித்து, உலக டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையையும் படைத்திருக்கிறது. இதற்கு ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் எப்படி விளையாட வேண்டும் என்ற தெளிவான அணுகுமுறையில் இருப்பதும் முக்கிய காரணம்.
நேற்றைய போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பேசி இருக்கும் பாட் கம்மின்ஸ் “இன்று இரவு நாங்கள் எதுவும் பெரிதாக திட்டமிடவில்லை. இலக்கை துரத்துவதற்கு நாங்கள் சரியானவர்களாக இருப்போம் என்று நினைத்தோம். ஆனால் அது எங்களுக்கு சரியாக வரவில்லை. எனவே இதற்கு நாங்கள் வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.
மேலும் நடப்பு ஐபிஎல் சீசனில் டி20 கிரிக்கெட் வேறு ஒரு இடத்திற்கு சென்று விட்டதாகவும் நினைக்கிறேன். நாங்கள் ஆக்ரோஷமாக விளையாடுவது என அமைத்துக் கொண்ட வழிதான் மிகவும் சிறந்ததாக இருக்கிறது. எங்களுக்கு கிடைத்திருக்கும் ஆக்ரோஷமான பேட்ஸ்மேன்கள்தான் எங்களுடைய கிரிக்கெட்டுக்கான சரியானவர்கள். போட்டியை வெல்வதற்கு நாங்கள் விளையாடும் வழிதான் சரியானது.
இதையும் படிங்க : சிஎஸ்கேல ருதுராஜ் இருக்குறதுக்கு ரொம்ப நன்றி.. இந்த ரகசியத்தை அவர்கிட்ட கேட்டுகிட்டு இருக்கேன் – மைக் ஹசி பேட்டி
வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் எங்கள் பேட்டிங் குறித்து எனக்கு எந்தக் கவலையும் கிடையாது. இந்த சீசன் முழுவதும் எங்களுடைய பேட்ஸ்மேன் மிகவும் சிறப்பாக இருந்தார்கள். இது டி20 கிரிக்கெட். நீங்கள் தவற விடக் கூடாத போட்டிகளில் விளையாடுகிறீர்கள். எங்களுடைய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்த விதம் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது” என்று கூறியிருக்கிறார்.