“ஊருதான் இங்கிலாந்து மாதிரி.. பிட்ச் நினைச்ச மாதிரி இல்ல.. என்ன நடக்குமோ தெரியாது” – பென் ஸ்டோக்ஸ் பேச்சு

0
264
Stokes

இங்கிலாந்து அணி தனது இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்தின் கடைசி போட்டியை இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் வைத்து விளையாடி முடிக்க இருக்கிறது.

இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானம் நல்ல இயற்கை எழிலுடன் அமைந்த, நல்ல குளிரான பிரதேசம். மழை அச்சுறுத்தல் தாண்டி, பனிமூட்டம் மற்றும் பனிமழை வரை எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

நாளை போட்டி துவங்கும் முதல் நாளில் மழை மற்றும் பனிமூட்டம் பாதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. இரண்டாவது நாளிலும் இது ஓரளவுக்கு தொடரும் என்றும், கடைசி மூன்று நாட்களில் நல்ல வெளிச்சம் ஆரம்பத்தில் கிடைக்கும் என்றும், ஆனால் கடைசி செஷன் மின்விளக்குகளில் உதவியுடன்தான் விளையாட வேண்டும் என்றும் வானிலை அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

இது இங்கிலாந்து தட்பவெப்ப நிலைக்கு ஒத்ததாக இருக்கக்கூடிய மைதானம். எனவே இங்கு பந்து ஸ்விங் ஆகலாம், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நல்ல உதவி கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதன் காரணமாக இந்த தொடரில் முதல் முறையாக இரு அணிகளும் தங்கள் விளையாடும் அணியில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு வரலாம் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள். ஆனால் இன்று பிளேயிங் லெவனை வெளியிட்ட இங்கிலாந்து அணியில் மார்க் வுட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் இருவர் மட்டுமே வேகப்பந்துவீச்சாளர்களாக இடம் பெற்று இருந்தார்கள்.

- Advertisement -

இதுகுறித்து இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் கூறும்போது ” நாங்கள் இங்கு வருவதற்கு முன்பாக மூன்று வேகப் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாட வேண்டும் என்று நினைத்து இருந்தோம். ஆனால் இன்று நாங்கள் ஆடுகளத்தை பார்த்ததும் எங்கள் முடிவை மாற்றிக் கொண்டு, இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் என்று செல்வது என்று முடிவெடுத்திருக்கிறோம்.

ஆடுகளத்தில் புல் கொஞ்சம் இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் இந்த ஆடுகளத்தில் அப்படி எதுவும் பெரிதாக இல்லை. எனவே இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை வைத்துக்கொண்டு, எங்களுடைய சிறந்த சுழற் பந்துவீச்சாளர்கள் சோயப் பஷீர் மற்றும் டாம் ஹார்ட்லி என நல்ல கலவையை கொண்டு வருகிறோம். போட்டி தொடர்ந்து நடக்கும் பொழுது ஆடுகளம் என்ன செய்யுமோ தெரியவில்லை.

இதையும் படிங்க : ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் ரேங்கிங்.. வெறும் 8 போட்டிகள்.. சாதித்த இளம்புயல் ஜெய்ஸ்வால்

இந்தத் தொடர் முடிவுகளின் அடிப்படையில் எங்களுக்கு சரியாக செல்லவில்லை என்பது உண்மைதான். ஆனால் நாங்கள் இந்த டெஸ்ட் தொடரில் வெளிப்படுத்திய போராட்டம் மிகச் சிறப்பான ஒன்றாக இருக்கிறது. ஒரு அணியாக நாங்கள் நல்ல முறையில் செயல்பட்டு இருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.