172 ஸ்டிரைக் ரேட்.. சிஎஸ்கே தவறவிட்ட தங்கம்.. யார் இந்த 20 வயது நிதிஷ் குமார் ரெட்டி

0
4566

நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில், இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் மிடில் ஆர்டரில் நான்காவதாக களம் இறங்கி 64 ரன்கள் குவித்த நிதிஷ் குமார் ரெட்டி.

பஞ்சாபில் நடைபெற்ற இப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வலுவான தொடக்க வரிசை விரைவிலேயே ஆட்டமிழக்க, அந்த நேரத்தில் மிடில் ஆர்டரில் நான்காவதாக களம் இறங்கிய நிதிஷ் குமார் ரெட்டி, பஞ்சாப் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். வெறும் 37 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 172 ஸ்ட்ரைக் ரேட்டில் நான்கு பவுண்டரி 5 சிக்சர்கள் என 64 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இதற்கு பக்கபலமாக அப்துல் சமாத் மட்டும் 12 பந்துகளில் 25 ரன்கள் குவிக்க, சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி வெற்றி இலக்கை நெருங்கி வந்து இறுதியாக இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 64 ரன்கள் குவித்து நிதிஷ்குமார் ரெட்டி ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

யார் இந்த நிதிஷ் குமார் ரெட்டி

20 வயதே ஆன நிதிஷ் குமார் ரெட்டி தனது நான்காவது டி20 போட்டியில் களமிறங்கி தனது முதலாவது அரைசதத்தை அபாரமான சிக்சர் மூலம் அடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய நிதிஷ் குமார் எட்டு பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். இந்த நிதிஷ் குமார் ரெட்டி ஆந்திராவில் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட்டில் ஹனுமா விகாரியுடன் விளையாடி வருகிறார். இந்திய கிரிக்கெட் வீரரான ஹனுமா விகாரி நிதீஷ் குமார் ரெட்டி ஒரு சூப்பர் ஸ்டாராக வருவதற்கான அனைத்து தகுதிகளும் இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

நிதிஷ் குமார் ரெட்டி தனது அடையாளங்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் பென்ஸ் ஸ்டோக்ஸ் ஆகியோரை வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஆந்திரா அணிக்காக ரஞ்சிக்கோப்பையில் விளையாடி ஏழு போட்டிகளில் அரை சதம் மற்றும் சதம் அடித்து 366 ரன்கள் குவித்திருக்கிறார். 19 வயது உட்பட்டோருக்கான அண்டர் 19 கிரிக்கெட்டில் இந்தியா பி அணியில் 17 முதல் தர போட்டிகளில் விளையாடி 566 ரன்களை குவித்திருக்கிறார். இவரை கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் 20 லட்சத்திற்கு சன்ரைசர்ஸ் அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நிதிஷ் குமார் ரெட்டிக்கு ஐபிஎல் என்பது புதிய ஒன்று அல்ல. இவர் ஏற்கனவே 2021ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்டில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நெட் பவுலராக இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அங்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் எம் எஸ் தோனி ஆகியோரின் அனுபவத்தால் தனது திறமைகளை மேலும் வளர்த்துக் கொண்டார். இதுவரை உள்நாட்டு போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் ஏழு அரை சதங்களை அடித்து இருக்கிறார் என்றும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அரிதிலும் அரிது.. 140 கிமீ வேகம்.. ஸ்டம்பிங் செய்த கிளாசென்.. புவனேஸ்வர் குமார் யாரும் செய்யாத சாதனை

பந்துவீச்சிலும் பெரிதும் பங்களிக்கக்கூடிய ஆல் ரவுண்டரான இவர் 17 போட்டியில் விளையாடி மூன்று முறை நான்கு விக்கெட்டுகளையும், இரண்டு முறை ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். தற்போது பஞ்சாப் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடியுள்ளதால் இவரது எதிர்காலம் தற்போது பிரகாசமாகியுள்ளது.