ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் பகல் இரவு போட்டியாக நடைபெற்று வருகிறது.
முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்க, இரண்டாவது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 313 ரன்கள் சேர்த்தது.
இதற்கு அடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா 24 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பிறகு உஸ்மான் கவஜா அலெக்ஸ் காரி மற்றும் கேப்டன் கம்மின்ஸ் மூவரும் அரை சதம் எடுக்க, ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்து அதிரடியாக டிக்ளேர் செய்தது. இரவில் கடைசி நேரத்தில் பந்து ஸ்விங் ஆவதின் மூலம் விக்கெட் எடுக்க இந்த திட்டத்தை ஆஸ்திரேலியா கையாண்டது.
இதற்கடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய வெஸ்ட் இண்டிஸ் ஆஸ்திரேலியா பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 193 ரன்களுக்கு சுருண்டது. கடைசி விக்கெட்டாக வேகப்பந்துவீச்சாளர் ஷாமார் ஜோசப் காலில் காயம்பட்டு வெளியேற, வெஸ்ட் இண்டிஸ் துரதிஷ்டவசமாக ஒரு பந்துவீச்சாளரையும் இழந்தது.
ஆஸ்திரேலியா அணிக்கு 216 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட, மூன்றாவது நாளின் கடைசி நேரத்தில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா இரண்டு விக்கெட் இழப்புக்கு தற்பொழுது 60 ரன்கள் எடுத்திருக்கிறது.
இதையும் படிங்க : 148ரன்.. ஹோப் கொடுத்த போப்.. இங்கிலாந்து இந்திய அணிக்கு சவால்.. பரபரப்பான முதல் டெஸ்ட்
ஸ்மித் 33, கேமரூன் கிரீன் 9 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நிற்கிறார்கள். அந்த அணியின் வெற்றிக்கு இன்னும் 156 ரன்கள் தேவைப்படும் நிலையில் எட்டு விக்கெட் கைவசம் இருக்கிறது. நாளை எட்டு விக்கெட்டை வெஸ்ட் இண்டீஸ் வீழ்த்தினால், பகல் இரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய முதல் அணியாக வெஸ்ட் இண்டீஸ் சாதனை படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்படி ஒரு வெற்றி அதுவும் டெஸ்ட் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய மண்ணில் கிடைக்கும் பொழுது, நொடிந்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் புத்துணர்ச்சி அடைவதற்கு இப்படியான வெற்றி உதவியாக இருக்கும்.